தமிழகத்திற்கு இனி காவிரி நீர் திறக்க இயலாது; மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு சித்தராமையா கடிதம்
தமிழகத்திற்கு இனி காவிரி நீர் திறந்து விட இயலாது என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு:
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு காவிரி திறக்க இயலாது என்று கூறி ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு முதல்-மந்திரி சித்தராமையா நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், 'காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் தற்போது காவிரி அணைகளில் உள்ள தண்ணீர் குடிநீர் மற்றும் கர்நாடக விவசாயிகளின் பாசனத்திற்கு நீர் வழங்க மட்டுமே போதுமானதாக உள்ளது. அதனால் தமிழகத்திற்கு இனி காவிரி நீர் திறக்க இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனால் அந்த மாநிலத்திற்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது. இதை கவனத்தில் கொண்டு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.