கர்நாடகத்தில் வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்; வானிலை ஆய்வு மையம் தகவல்


கர்நாடகத்தில் வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்; வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 2 July 2023 6:45 PM GMT (Updated: 2 July 2023 6:45 PM GMT)

வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்றும், மலைநாடு மாவட்டங்களில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்து வானிைல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும் இன்னும் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. மாநிலத்தில் கடலோர மாவட்டங்களிலும், வடகர்நாடக மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. எதிர்பார்த்த மழை பெய்யாததால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது.

இதனால் தென்மேற்கு பருவமழை எப்போது பெய்யும் என்று விவசாயிகள் வானம் பார்த்த பூமியாக காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கர்நாடகத்தில் வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. ஆனால் இன்னும் எதிர்பார்த்த மழை பொழிவு இல்லை. பின்வரும் நாட்களில் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். தற்போது கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளில் மட்டும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் மலைநாடு மாவட்டங்களாக குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா ஆகிய மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உத்தரகன்னடா மாவட்டம் அங்கோலா, கோகர்ணா, குமட்டாவில் தலா 9 செ.மீ. மழையும், ஒன்னாவரில் 8 செ.மீ., ஷிராலியில் 7 செ.மீ., உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மாநிலம் முழுவதும் அதிகளவு மழை பொழிவு இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story