நலத்திட்ட உதவி கேட்டு ஜமாபந்தி நிகழ்ச்சியில் 201 மனுக்கள்;கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர்


நலத்திட்ட உதவி கேட்டு ஜமாபந்தி நிகழ்ச்சியில் 201 மனுக்கள்;கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர்
x

உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவி கேட்டு ஜமாபந்தி நிகழ்ச்சியில் 201 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவி கேட்டு ஜமாபந்தி நிகழ்ச்சியில் 201 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

ஜமாபந்தி நிகழ்ச்சி

குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, கல்குளம், பத்மநாபபுரம், கிள்ளியூர் மற்றும் திருவட்டார் ஆகிய 6 தாலுகா அலுவலகங்களில் வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக நடந்தது. கல்குளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

அந்த வகையில் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 201 கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

மேலும் கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகளை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார். ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி தீர்வு காண வருவாய் அலுவலர்களுக்கு கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். முன்னதாக நேர்கோண கட்டை மூலமாக நில அளவை செய்யும் முறையினை அவர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் கல்குளம் தாசில்தார் (பொறுப்பு) ரமேஷ், வட்ட வழங்கல் அதிகாரி மரிய ஸ்டெல்லா, தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், தலைமை நில அளவர் கிரிதர், மண்டல துணை தாசில்தார் மகேஷ் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story