கொடுங்கையூர் தீ விபத்து: தீக்காயம் அடைந்தவர்களுக்கு அதி தீவிர சிகிச்சை


கொடுங்கையூர் தீ விபத்து:  தீக்காயம் அடைந்தவர்களுக்கு அதி தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 17 July 2017 10:15 PM GMT (Updated: 17 July 2017 4:33 PM GMT)

சென்னை பேக்கரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கொடுங்கையூரில் பேக்கரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சந்தித்து நலம் விசாரித்தனர். அவருடன் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) எம்.எஸ்.சங்கீதா மற்றும் அதிகாரிகளும் நலம் விசாரித்தனர்.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 20 பேரும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 10 பேரும் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி தீக்காயங்களுக்கான சிறப்பு மையமாக ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டு வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இங்கு தீக்காய சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் நிர்மலா தலைமையில் 12 டாக்டர்கள் மற்றும் 35 செவிலியர்கள் கொண்ட சிறப்பு குழு 24 மணிநேரமும் காயமைடந்தவர்களை கண்காணித்து அதிதீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அனுமதிக்கப்பட்டுள்ளோரில் ஒரு குழந்தை உள்பட 16 பேருக்கு 40 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் சற்று கவலைக்கிடமாக உள்ளனர். எனினும், இவர்களை காப்பாற்றுவற்கு தேவையான அனைத்து முயற்சிகளிலும் மருத்துவ குழு ஈடுபட்டுள்ளது.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேருக்கு ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் பொன்னம்பல நமச்சிவாயம் தலைமையில் குழு அமைத்து 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிவு, கிருமி தாக்காத வண்ணம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேவைப்படும் உயர்தர ஆன்டி–பயோடிக் உள்பட அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story