பொதுநல வழக்கில் கூறப்பட்டுள்ளதை போல தார் கொள்முதல் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்
பொதுநல வழக்கில் கூறப்பட்டுள்ளதை போல தார் கொள்முதல் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழக நெடுஞ்சாலை துறையால் மொத்தம் 57,043 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளை அமைக்க, பராமரிக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து தார் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட தாரின் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாதாமாதம் மாறுபடுகிறது. இதை அடிப்படையாக வைத்து தார் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் இருக்கும் சாதகமான அம்சங்களை பயன்படுத்தி நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் இந்த ஊழலை விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறையை (சி.பி.ஐ.) நியமிக்கக்கோரி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஊழலைப்போல, பாதாள சாக்கடை ஊழல், லேப்டாப் கொள்முதல் ஊழல், டாஸ்மாக் ஊழல் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அ.தி.மு.க. ஒரு ஊழல் கட்சி. அ.தி.மு.க. நடத்துவது ஒரு ஊழல் ஆட்சி. இந்த ஊழல் ஆட்சியை தக்கவைக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செய்கிற பல்வேறு முயற்சிகளுக்கு பா.ஜ.க. துணையாக இருந்து பாதுகாத்து வருகிறது.மடியில் கனம் இருப்பதால் தான் அ.தி.மு.க. அமைச்சர்கள் மத்திய பா.ஜ.க. தலைமைக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள். பெரும்பான்மையை இழந்து குதிரை பேரம் நடத்தி கவர்னர் ஆதரவோடு பெரும்பான்மை இழந்த அரசை நீண்டநாள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசு எவ்வளவு நாள் நீடிக்கிறதோ, ஒவ்வொரு நாளும் இதைப்போன்ற ஊழல் செய்வதில் தான் அக்கறை காட்டுவார்களே தவிர, மக்கள் நலனில் அக்கறை காட்டப்போதில்லை.
எனவே, நெடுஞ்சாலை துறையில் தார் கொள்முதல் செய்ததில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்த ஊழலை விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறையை (சி.பி.ஐ.) நியமிக்க வேண்டும் என கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வலியுறுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.