சென்னை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது 5 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழை


சென்னை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது 5 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 3 Nov 2017 12:16 AM GMT (Updated: 3 Nov 2017 12:15 AM GMT)

5 மணி நேரம் இடை விடாமல் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் இடைவிடாமல் கனமழை பெய்தது. ஓட்டேரி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

இந்த நிலையில், நேற்று காலையில் வெயில் தலை காட்டியது. பிற்பகல் 2 மணியளவில் நகரின் அநேக இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. மாலை 6 மணிக்கு பிறகு மழை வெளுத்து வாங்க தொடங்கியது. இரவு 11 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. அதன் பிறகும் சில பகுதிகளில் மழை நீடித்தது.

இடைவிடாமல் பெய்த பெருமழை காரணமாக சென்னை நகரமே வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் கிட்டத்தட்ட எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். போக்குவரத்து போலீசார் எவ்வளவோ முயன்று போராடினாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து மின்சார ரெயில்களும் வேகம் குறைத்து இயக்கப்பட்டன.

ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. எந்தெந்த குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதோ, அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. தேங்கி இருக்கும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பலத்த மழையில் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளன. செம்பாக்கம் பெரிய ஏரி நிரம்பியதால் ஆக்கிரமிப்பாளர்களால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ராஜகீழ்ப்பாக்கம் ஏரியிலும் ஆக்கிரமிப்பு வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உபரிநீர் செல்லும் பகுதியில் ஏரி கரையை உடைக்க சிலர் முயற்சிப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது.

சேலையூர் ஏரியை பார்வையிட்ட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறும்போது, “ஏரி ஆக்கிரமிப்பாளர்களால் ஏரிகள் உடைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

இதேபோல பீர்க்கன்காரணை ஏரி நிரம்பிய நிலையில், ஏரிக்கரை பஸ் நிறுத்தம் அருகே தண்ணீர் வெளியேறும் வகையில் கரை உடைபட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஏரி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.


Next Story