‘புனிதமான வக்கீல் தொழிலை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ ஐகோர்ட்டு நீதிபதி வேதனை


‘புனிதமான வக்கீல் தொழிலை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ ஐகோர்ட்டு நீதிபதி வேதனை
x
தினத்தந்தி 30 Nov 2017 11:30 PM GMT (Updated: 30 Nov 2017 10:19 PM GMT)

போலி வக்கீல்களை ஒழிக்கும் பரிந்துரைகளை கடைபிடிக்காவிட்டால் புனிதமான வக்கீல் தொழிலை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

குடும்ப தகராறு தொடர்பான வழக்கில் சிக்கிய ஒருவருக்கு, அவருக்கு தெரியாமலேயே முன்ஜாமீன் மனுவை வக்கீல்கள் தாக்கல் செய்ததாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பான மனுவை கடந்த மாதம் 6–ந்தேதி விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள மொத்த வக்கீல்களில் 33 சதவீதம் பேர் போலி வக்கீல்களாக வலம் வருவதாக தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே, வழக்குகளில் ஆஜராகும் வக்கீல்கள் வக்காலத்துகளில் தங்களது புகைப்படத்தை ஒட்டி, பதிவு சான்றிதழின் நகல், அடையாள அட்டை, முகவரிக்கான ஆவணம், இ–மெயில் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும். புகைப்படத்தை ஐகோர்ட்டு பதிவுத்துறை அதிகாரிகள் ‘ஸ்கேன்’ செய்து சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வக்கீல் சங்கங்கள் மனுத்தாக்கல் செய்தன.

இந்த மனுக்களை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

வக்காலத்து மனுவில் வக்கீல்களின் புகைப்படங்களை ஒட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை இந்த ஐகோர்ட்டு பிறப்பிப்பதற்கு முன்பு, வக்கீல் சங்கங்களின் கருத்தை கேட்டது. ஆனால், அப்போது கருத்துகள் எதையும் இந்த சங்கங்கள் தெரிவிக்கவில்லை. அதனால், இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், போலி வக்கீல்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்கக்கோரி தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தான் மேல்முறையிட முடியும்.

சுப்ரீம் கோர்ட்டு உள்பட அனைத்து நீதிமன்றங்களும் புனிதமான வக்கீல் தொழிலின் மேன்மையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் உத்தரவு பிறப்பிக்கின்றன. போலி வக்கீல்களால், வழக்கு தொடர வரும் ஏழை மக்களின் தலையெழுத்து மாற்றப்பட்டு விடக்கூடாது.

சில வக்கீல்கள் செய்யும் சட்டவிரோத செயல்களால் பொதுமக்கள் மத்தியில் வக்கீல்களுக்கு உள்ள மதிப்பு குறைந்து கொண்டே வருகின்றன. முற்காலத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வக்கீலாகத்தான் தொழில் செய்து வந்தனர். நீதிக்காக அவர்கள் தங்களின் வக்கீல் தொழிலை பயன்படுத்தினர். வக்கீல் தொழில் என்பது ஒருங்கிணைந்த சேவையாகும்.

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக இந்த தொழிலில் சில கருப்பு ஆடுகள் ஊடுருவி தொழிலின் மாண்பை சீரழித்து விட்டன. இது வேதனை அளிக்கிறது. டாக்டர் தவறு செய்தால் நோயாளி 6 அடி நிலத்திற்குள் செல்ல வேண்டியதுதான். வக்கீல் தவறு செய்தால், வழக்கு தொடர்ந்தவர் 6 அடி உயரத்தில் தொங்க வேண்டியதுதான் (தூக்குப்போட்டு கொள்ள வேண்டியது தான்).

எனவே, தான் சரியான வக்கீல்களை அடையாளம் காண வக்காலத்து மனுவில் வக்கீல்களின் புகைப்படத்தை கண்டிப்பாக ஒட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவை மாற்றக் கோரியதை ஏற்க முடியாது. வேண்டுமென்றால், வக்கீல்கள் சங்கங்கள் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம்.

அதேநேரம், வக்காலத்து மனுக்களில் வக்கீல் புகைப்படம் ஒட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை இனியும் பின்பற்றவில்லை என்றால் வக்கீல் தொழிலை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

இவ்வாறு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கூறியுள்ளார்.


Next Story