ஒகி புயல் தாக்குதல்: மீட்புக்குழுவை அனுப்ப வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்


ஒகி புயல் தாக்குதல்: மீட்புக்குழுவை அனுப்ப வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Dec 2017 10:45 PM GMT (Updated: 1 Dec 2017 7:15 PM GMT)

ஒகி புயல் தாக்குதல்: மத்திய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவை அனுப்ப வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை,

மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜூவை நேரில் சந்தித்து தென் தமிழகத்தை வலுவாக தாக்கிய ஒகி புயலினால் ஏற்பட்ட சேதம் குறித்து விரிவாக எடுத்துரைத்ததுடன், மத்திய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினை போதிய எண்ணிக்கையில் அனுப்பி வைக்கவும், புயலினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜூ, மத்திய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு 2 குழுக்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதையும் மேலும் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக தேவையான எண்ணிக்கையில் குழுக்கள் அனுப்பி பாதிக்கப்பட்டவர்களை மீட்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு விரைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.

எனவே ஒகி புயலினால் பாதிப்பிற்குள்ளான மக்களை மீட்கும் அனைத்து வகையான செயல்பாடுகளிலும் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதை தென் தமிழக மக்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமை என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்று ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்கும் வகையில் போதியளவு மீட்புக்கப்பல், கப்பற்படை வீரர்கள், விமானபடையை அனுப்பி வைக்க வலியுறுத்தினார். மீனவர்களை மீட்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக நிர்மலா சீதாராமன் அவரிடம் தெரிவித்தார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story