ஜெயலலிதா மரணம் தொடர்பாக தாக்கல் ஆன பிரமாண பத்திரத்தில் சசிகலா கூறி இருப்பது என்ன?


ஜெயலலிதா மரணம் தொடர்பாக தாக்கல் ஆன பிரமாண பத்திரத்தில் சசிகலா கூறி இருப்பது என்ன?
x
தினத்தந்தி 22 March 2018 12:18 AM GMT (Updated: 22 March 2018 12:18 AM GMT)

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பது என்ன? என்று விசாரணை ஆணையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் கடந்த 12-ந் தேதி சசிகலா பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருப்பதால், நேரில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டு அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

55 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை அவருடைய வக்கீல்கள், விசாரணை ஆணையத்திடம் சீலிடப்பட்ட கவரில் அளித்தனர்.

அதில் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லமான வேதா நிலையத்தில் இருந்து அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றது முதல் ஜெயலலிதா மரணம் அடைந்தது வரையிலான அனைத்து நிகழ்வுகளும் தேதி வாரியாக மொத்தம் 99 பாராக்களில் சசிகலா விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.

அந்த பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்தபோதே ஜெயலலிதாவிற்கு மனதளவில் வேதனை அதிகரித்தது. இதுவே உடல்நல குறைபாடு ஏற்படுவதற்கு காரணம். ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரித்தது. விடுதலையாகி வந்த பின்னரும் பாதிப்பு தொடர்ந்தது. எனவேதான் சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின்னரும் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

நீரிழிவு மருத்துவர், தோல்நோய் மருத்துவர்கள் பரிசோதனை செய்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை அளித்தனர். செப்டம்பர் முதல் வாரத்திலேயே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது. சர்க்கரை அளவு நிலையாக இல்லாமல் இருந்ததே இதற்கு காரணம். செப்டம்பர் 19-ம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டது. செப்டம்பர் 21-ம் தேதி கடைசியாக பங்கேற்ற பொது நிகழ்ச்சியிலும், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு அழைத்தும் வர மறுத்தார்.

22-ம் தேதியன்று இரவு 9.30 மணி அளவில் வீட்டின் முதல் தளத்தில் உள்ள குளியல் அறையில் பல் துலக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக என்னை உதவிக்காக அழைத்தார். இதையடுத்து அவரை, படுக்கை அறைக்கு அழைத்து செல்வதற்கு நான் உதவி செய்தேன். சிறிது நேரத்தில் படுக்கை அறையில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து டாக்டர் சிவகுமாரை உதவிக்கு அழைத்தேன்.

அவர் பரிசோதனை செய்வதற்கு ஜெயலலிதா அறைக்குள் சென்ற உடன், 2 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் டிரைவர் ஒருவரும் உதவிக்காக அழைக்கப்பட்டனர். உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரி குழுமங்களின் துணை தலைவரான பிரீத்தா ரெட்டியின் கணவர் விஜயகுமார் ரெட்டிக்கு, டாக்டர் சிவக்குமார் போன் செய்து தேனாம்பேட்டை மற்றும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிகளில் இருந்து இரண்டு ஆம்புலன்சுகளை வரவழைத்தார்.

ஆம்புலன்சுகள் சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்தன. அப்பல்லோ மருத்துவ குழு படுக்கை அறையில் சுயநினைவு இல்லாமல் மயங்கிக் கிடந்த ஜெயலலிதாவை ஸ்டிரெச்சரில் வைத்து கீழே கொண்டுவந்தனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் விரைவாக ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு ஏற்றாற்போல போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.

ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது, ஜெயலலிதாவுக்கு நினைவு திரும்பி எங்கே அழைத்து செல்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நான் (சசிகலா) ஆஸ்பத்திரிக்கு செல்கிறோம் என்று கூறினேன். முன்னதாக அன்றைய தினம் டாக்டர் சிவக்குமார் ஏற்கனவே 2 முறை ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். இதையடுத்து நான் ஆஸ்பத்திரிக்கு செல்வோம் என்று கூறினேன். அதற்கு ஜெயலலிதா மறுத்துவிட்டார்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ந் தேதி முதல் மரணம் அடைந்த டிசம்பர் 5-ந் தேதி வரையிலான நாட்களில் கட்சியின் மூத்த தலைவர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்தார். அ.தி.மு.க. தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், மு.தம்பிதுரை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் செப்டம்பர் 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலான நாட்களில் ஜெயலலிதாவை பார்த்தனர்.

செப்டம்பர் 27-ந் தேதி ஸ்கேன் செய்வதற்காக அக்கா (ஜெயலலிதா) அழைத்து செல்லப்பட்டபோது அவருடைய பாதுகாப்பு அதிகாரிகளான வீரபெருமாள் மற்றும் பெருமாள் சாமி ஆகியோரை பார்த்தார். அப்போது அவர்களிடம், “நான் தற்போது நலமாக இருக்கிறேன். டாக்டர்கள் இன்னும் சில நாட்கள் சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள். நான் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பிவிடுவேன்” என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம், மு.தம்பிதுரை, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா பேசுவதை தூரத்தில் இருந்து பார்த்தனர். அக்டோபர் 22-ந் தேதி அப்போது பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் கண்ணாடிக்கு வெளியே இருந்து ஜெயலலிதாவை பார்த்தார். கவர்னரை பார்த்ததும் ஜெயலலிதா கைகளை உயர்த்தினார். இதனை கவர்னரே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவை பார்த்த பின்னர் கவர்னர் என்னையும் சந்தித்தார்.

நவம்பர் 19-ந் தேதி ஜெயலலிதாவை தனி அறைக்கு மாற்றும்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் சில அமைச்சர்கள் பார்த்தனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அவருடைய ஒப்புதலோடு வீடியோ காட்சி எடுக்கப்பட்டது. அதில் 4 வீடியோ காட்சிகளை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன். வேதா நிலையத்தில் உள்ள ஜெயலலிதா அறையில் தெளிவான திட்டமிடலுடன் ஒரு குறிப்பு இருந்தது. அதில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கட்சியின் நிலைப்பாடு குறித்து அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு அவர் அறிவுறுத்திய தகவல்கள் இடம்பெற்றிருந்தது.

செப்டம்பர் 27-ந் தேதி காவிரி தண்ணீர் பங்கீட்டு குழுவில் தமிழகம் சார்பில் பங்கேற்க டெல்லி செல்லும் அதிகாரிகளுடன் ஜெயலலிதா நேரடியாக ஆலோசனை நடத்தினார். இதில், அப்போதைய தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ஏ.ராமலிங்கம் மற்றும் கே.என்.வெங்கடரமணன் ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்களிடம் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அறிவுரைகளை ஜெயலலிதா வழங்கினார். 2014-ம் ஆண்டு நவம்பர் முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஜெயலலிதாவுக்கு பல்வேறு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரிகளை சேர்ந்த அந்த டாக்டர்கள் 20 பேர் பட்டியலையும் சமர்ப்பித்திருக்கிறேன்.

இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் பிரமாண பத்திரம் என்று வெளியான தகவல்களை விசாரணை ஆணையம் மறுத்து உள்ளது.

இதுகுறித்து விசாரணை ஆணையம் தரப்பில் கூறியதாவது:-

விசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலத்தை நீதிபதி ஆறுமுகசாமி முழுமையாக படித்து விட்டார். சசிகலாவின் வாக்குமூலம் என்று கூறி ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த தகவல்களில் பெரும்பாலான தகவல்கள் தவறானவை. இதில், 30 சதவீத தகவல் மட்டுமே உண்மையானவை. மீதி 70 சதவீத தகவல் தவறானது.

எந்தெந்த தகவல்கள் உண்மையானது, எந்தெந்த தகவல்கள் பொய்யானது என்பதை முழுமையாக தெரிவிக்க இயலாது. துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், நிலோபர் கபில் ஆகியோர் ஜெயலலிதாவை பார்த்ததாக ஆங்கில பத்திரிகையில் வெளியான தகவல் குறித்து சசிகலாவின் வாக்குமூலத்தில் எதுவும் இல்லை. 20 மருத்துவர்கள் கொண்ட குழு வெவ்வேறு காலகட்டங்களில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கியதாக தெரிவித்து இருப்பது தவறானது.

சசிகலா தரப்பை நியாயப்படுத்துவதற்காக அவரது தரப்பில் இருந்து பத்திரிகைக்கு கொடுக்கப்பட்ட தகவலாகவே ஆணையம் இதை கருதுகிறது. சசிகலா கடந்த 19-ந் தேதி ஆணையத்தில் தனது வக்கீல்கள் மூலம் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார்.

ஒரு வாரத்துக்கு பின்பு சசிகலா தற்போது சிறையில் இருந்து பரோலில் வெளிவந்துள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகி இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்குமூலத்தில் இல்லாத விஷயங்களை பத்திரிகைக்கு அளித்தது குறித்தும் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. 

Next Story