ஈரோடு மண்டல 2 நாள் திமுக மாநாடு பெருந்துறை அண்ணாநகரில் கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஈரோடு மண்டல 2 நாள் திமுக மாநாடு பெருந்துறை அண்ணாநகரில் கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 24 March 2018 5:32 AM GMT (Updated: 24 March 2018 5:32 AM GMT)

மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, ஈரோடு மண்டல திமுக மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. #DMK #MKstalin

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம்  பெருந்துறைஅருகே உள்ள சரளையில் ஈரோடு மண்டல 
தி.மு.க. மாநாடு இன்றும் (24-ந் தேதி) நாளையும் (25-ந் தேதி) நடக்கிறது. மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாநாட்டிற்காக 
பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. ரோமன் கட்டிட கலை வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது.  சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமர இருக்கைகள் போடப்பட்டிருந்தன. 

காலை 9 மணிக்கு மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி அரித்துவார மங்கலம் ஏ.கே. பழனிவேல் குழுவினரின் நாதஸ்வரம் மற்றும் தவிலிசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.

மாநாட்டையட்டி இன்று அதிகாலையில் இருந்தே ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோடடை, பரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தி.மு.க. தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வந்து குவிந்தனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தொண்டர்களையும், நிர்வாகிகளையும் மாநாட்டு வரவேற்பு குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்து சாமி மற்றும் வரவேற்பு குழுவினர் வரவேற்றனர்.

இதையடுத்து தொண்டர்கள் மாநாட்டு பந்தலில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். காலை 8 மணிக்கெல்லாம் மாநாட்டு பந்தல் நிரம்பி வழிந்தது. மாநாட்டு திடலுக்கு வெளியேயும் ஏராளமான தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர்.

மாநாட்டு திடலுக்கு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருடன் பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வந்தனர். 

மு.க.ஸ்டாலின் மாநாட்டு திடலுக்கு வந்ததும் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அவர்கள் பார்த்து மு.க. ஸ்டாலின் கை அசைத்தார்.  பின்னர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கோ.வி. செழியன் எம்.எல்.ஏ. மாநாட்டு அரங்கத்தினுள் கட்சி கொடியேற்றினார். ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு. முத்துசாமி வரவேற்று பேசினார்.

Next Story