தமிழகத்தில் மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது, இந்தி திணிக்கப்படுகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


தமிழகத்தில் மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது, இந்தி திணிக்கப்படுகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 March 2018 3:03 PM GMT (Updated: 25 March 2018 3:03 PM GMT)

தமிழகத்தில் மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது, இந்தி திணிக்கப்படுகிறது என மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டிஉள்ளார். #MKStalin


ஈரோடு,


ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிவருகிறார். அவர் பேசுகையில், திமுகவில் செயல் தலைவராக பணியாற்றுவதைவிட, தொண்டராக பணியாற்றுவதிலே பெருமைகொள்கிறேன். திமுக எனும் பெட்டி கலைஞர் கையில் இருக்கிறது, அதை ஏற்று நான் செயல்படுவேன். என் மீது இருக்கும் நம்பிக்கையை விட உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அதிபலத்துடன் உள்ளது.

 மத்திய பாஜக ஆட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி சேவகம் செய்து வருகின்றனர் என்றார். 

தமிழகத்தில் மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது; இந்தி திணிக்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார். 

சமஸ்கிருதத்தை திணிக்க பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன எனவும் பேசினார். 

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் சட்டமன்றம் கூட்டப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதுவும் மத்திய அரசுக்கு அனுப்பட்டது. இதுவரையில் அதற்கு பதில் கிடையாது. காவிரி நீர் விவசாயிகளின் பிரச்னையாகும், அதில் திமுக எப்போதும் அரசியல் செய்யாது. தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி காவிரி மேலாண்மை வாரியத்திற்காக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம், அதற்கும் பலனில்லை என்றால் டெல்லி சென்றும் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம் என்றார் மு.க. ஸ்டாலின். பண பலம் மற்றும் அதிகார பலத்தை கொண்டு மத்திய அரசு இப்போது தமிழகத்தை வளைக்க முயற்சி செய்கிறது.

 மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசை முறியடிக்க வேண்டும், தமிழகத்தில் மதவாதத்தை அனுமதிக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டார். 

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக சிலர் மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். வெற்றிடம் இருப்பதாக கூறி தமிழகத்தில் முதல்வர் ஆகும் கனவுடன் பலரும் முயற்சிக்கின்றனர். வெற்றிடம் என்பது எப்போதும் கிடையாது என்றும் ஸ்டாலின் பேசினார்.


Next Story