தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 2 May 2018 11:49 PM GMT (Updated: 2 May 2018 11:49 PM GMT)

தேர்தலில் வெற்றி முகடு நோக்கி விரைந்து பயணிப்போம் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் எல்லா திசைகளிலும் எண்ணற்ற பிரச்சினைகள், ஆட்சியாளர்கள் மீது பொதுமக்கள் அதிருப்தி, நாள்தோறும் வெடிக்கின்ற போராட்டங்கள், மத்திய ஆட்சியாளர்களின் வஞ்சகம் எனத் தொடர்ச்சியான நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில், திட்டமிட்ட தேதியில் தி.மு.க. நிர்வாகிகள் களஆய்வினை நிறைவு செய்திட முடியவில்லை. எனினும், பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ந் தேதியுடன் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து உரையாடும் அரிய வாய்ப்பினை நிறைவு செய்திருக்கிறேன்.

இந்த களஆய்வில் மொத்தம் 27,678 தொண்டர்களை நேரில் கண்டு, அவர்களின் நெஞ்சத்திலிருந்து வெளிப்பட்ட ஆர்வம் மிக்க வார்த்தைகளை கேட்டறிந்துள்ளேன்.

அவரவர் கருத்துகளை, ஆலோசனைகளை, குறைகளை, புகார்களை எழுதி, அவற்றை தீர்வு காணும் பெட்டிகளில் போடுகின்ற வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்தக்கடிதங்கள் அனைத்தும் என்னுடைய நேரடிப் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டு, கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து கடிதங்களும் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், தி.மு.க.வினரின் கடிதங்களில் குறைகள் குறைவாகவும், கருத்துகள், ஆலோசனைகள், கோரிக்கைகள் மிகுதியாகவும் இருப்பதை காண முடிகிறது.

காரைக்குடியைச் சேர்ந்த மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராம.ராஜேந்திரன், கட்சி வளர்ச்சியை மட்டுமே கருதி, தனி நபர்களின் சுயநலத்திற்காக நம் கட்சியில் உள்ள தொண்டர்களை அரவணைக்காமல், அதன் காரணமாக நம் தொண்டர்கள் மாற்றுக்கட்சிக்கு சென்றிருந்தால் அவர்களை அரவணைத்து, நம் கட்சிக்கு கொண்டுவர முயற்சிக்கவேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் வடசித்தூர் ஊராட்சி பொறுப்பாளர் ஏ.பி.சுப்பிரமணியம் தி.மு.க.வின் ஒவ்வொரு ஊராட்சி பொறுப்பாளரும் மக்கள் பிரச்சினைகளை சீர்செய்திட உதவி செய்யவேண்டும் என்றும், மக்கள் பிரச்சினைகளை சொல்வதற்கு வசதியாக, ‘வாட்ஸ் ஆப்’ அல்லது ‘கஸ்டமர் கேர் நம்பர்’ போன்ற தி.மு.க. சேவை எண் வழங்கவேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வழங்கியிருக்கிறார்.

களஆய்வு பணி என்பது, பயிர் மேலும் செழித்தோங்குவதற்கான சந்திப்பு. இனி, அகற்றப்பட வேண்டிய சில களைகளை அகற்றி, அனைத்து வகையிலும் உரமூட்டும் பணிகள் உற்சாகத்துடன் மேற்கொள்ளப்பட்டு, தமிழகம் எனும் மாபெரும் கழனியெங்கும் தி.மு.க. பயிர் செழிக்கவும், முற்றியதும் வெற்றிக்கதிர்களை விரைந்து அறுவடை செய்யவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியினை வழங்குகிறேன்.

நாம், தேர்தலில் வெற்றி முகடு நோக்கி விரைந்து பயணிப்போம். நம் தமிழ் மக்களின் அன்பான பேராதரவுடன் வெற்றிக்கொடியை பார் வியக்க உயர்த்திப் பட்டொளிவீசிப் பறந்திடச் செய்வோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story