‘நீட்’ தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு


‘நீட்’ தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 5 May 2018 11:30 PM GMT (Updated: 5 May 2018 8:44 PM GMT)

திருவனந்தபுரம், எர்ணாகுளத்துக்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்றுள்ள தமிழக மாணவர்கள் தங்குவதற்கு கேரள அரசும், தமிழ்ச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

திருவனந்தபுரம்,

மருத்துவ படிப்புக்கான தகுதி நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள மையங்களில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுத கேரளா செல்லும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழ்ச் சங்கத்தினர், கேரள அரசுடன் இணைந்து திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சிறப்பு தகவல் மையங்கள் அமைத்துள்ளனர்.

திருவனந்தபுரத்துக்கு சென்ற மாணவர்கள் தங்க வசதியாக தைக்காடு மாடல் மேல்நிலைப்பள்ளியிலும், மாணவிகள் தங்க வசதியாக மணக்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

மேலும் அங்கிருந்து மாணவ-மாணவிகள் சிரமமின்றி தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தேவையான வாகன வசதியும் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு அமைப்புகள் சார்பில் இலவச ஆட்டோ சேவையும் நடத்தப்படுகிறது.

இதே போல் எர்ணாகுளத்திலும் தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகள் தங்குவதற்கும், அங்கிருந்து தேர்வு மையங்களுக்கு செல்லவும் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம் செல்வோரின் வசதிக்காக ரெயில்களில் முன்பதிவு இல்லாமல் சாதாரண டிக்கெட் எடுத்தவர்கள் எர்ணாகுளம் வரை விரைவு மற்றும் அதிவிரைவு ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் செல்ல தெற்கு ரெயில்வே சார்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரத்தில் தமிழ்ச் சங்க தலைவர் நைனார் தலைமையில், செயலாளர் மோகன்தாஸ், நிர்வாகிகள் ஹாஜா, செந்திவேல், வீரணம் முருகன் மற்றும் இந்திய விண்வெளி மைய ஊழியர்களும், எர்ணாகுளத்தில் பாபு வெங்கட்ராமன் உள்பட பலரும் இணைந்து இந்த சேவையை செய்து வருவதாக தமிழ்ச் சங்கத்தினர் தெரிவித்தனர்.


Next Story