துப்பாக்கி சூடு சம்பவம்; தூத்துக்குடியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் நிறுத்தம்


துப்பாக்கி சூடு சம்பவம்; தூத்துக்குடியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் நிறுத்தம்
x
தினத்தந்தி 23 May 2018 7:52 AM IST (Updated: 23 May 2018 7:52 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் பலியான நிலையில், தூத்துக்குடியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது.  இந்த ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பாஸ்பாரிக் அமிலம், கந்தக அமிலம் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இந்த ஆலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்த ஆலையின் கழிவுகளால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மேலும் விரிவாக்கம் செய்வதை கைவிட்டு, நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்துக்கு 18 கிராம மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது. இதனால் கடந்த 1½ மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100-வது நாளாக நீடித்தது.

நூறாவது நாளையொட்டி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

எனினும் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்து.  இந்நிலையில், நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.  இதில் போராட்டக்காரர்களில் சிலர் போலீசார் மீது கற்களை வீசினர்.  போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

தொடர்ந்து நடந்த சம்பவத்தில் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.  ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.  போராட்டக்காரர்களில் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்தனர். அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை கல்வீசி தாக்கி சூறையாடினார்கள். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட நிலையில் கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.  இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள்.  65 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், வன்முறையில் 17 அரசு பேருந்துகள் சேதமடைந்து உள்ளன என போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.  துப்பாக்கி சூடு சம்பவத்தினை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து நெல்லை, மதுரை செல்லும் அரசு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.  தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் நகர பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.

இதேபோன்று திருச்செந்தூர், கோவில்பட்டி, நெல்லை செல்லும் தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.

Next Story