தமிழ்நாடு வனத்துறையில் 1,178 காலி பணி இடங்களுக்கு தேர்வு


தமிழ்நாடு வனத்துறையில் 1,178 காலி பணி இடங்களுக்கு தேர்வு
x
தினத்தந்தி 6 Oct 2018 11:50 PM GMT (Updated: 6 Oct 2018 11:50 PM GMT)

தமிழ்நாடு வனத்துறையில் 1,178 காலி பணி இடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் தேர்வு நடத்த உள்ளது. வனவர் வேலைக்கு 25 கி.மீ. தூரம் நடந்து காட்டவேண்டும்.

சென்னை,

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் தமிழ்நாடு வனத்துறையில் 300 காலி பணி இடங்களை கொண்ட வனவர் பணிக்கும், 726 காலி பணி இடங்களை கொண்ட வனக்காப்பாளர் பணிக்கும், 152 காலி பணி இடங்களை கொண்ட ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கும் என மொத்தம் 1,178 காலி பணி இடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் இணையவழி (ஆன்லைன்) மூலமாக தேர்வு நடத்த உள்ளது.

வனவர் பணிக்கு தகுதியாக அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். இதேபோல வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கு பிளஸ்-2 அறிவியல் பிரிவில் படித்திருக்கவேண்டும்.

வனக்காப்பாளர் பணிக்கு பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். இதேபோல பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 26.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர் 3.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 15 சதவீதம், அருந்ததியர் 3 சதவீதம், பழங்குடியினர் 1 சதவீதம் என்ற ஒதுக்கீட்டிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பிரிவுகளில் பெண்களுக்கு 30 சதவீதமும், ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் அனைத்து பணியிடங்களிலும் 20 சதவீதம் தகுதியானவர்களாக பரிந்துரைக்கப்படுவார்கள்.

வனவர் பணிக்கு இணையவழி மூலமாக தலா 100 மதிப்பெண்கள் அடிப்படையில் பொது அறிவு தேர்வு மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு தொடர்பான தேர்வு என 2 தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஆண்கள் 25 கி.மீ. தூரமும், பெண்கள் 16 கி.மீ. தூரமும் 4 மணி நேரத்தில் நடந்து காட்டவேண்டும். உடல் தகுதியாக உயரம் 163 செ.மீ., பழங்குடியினர் 152 செ.மீ. இருக்கவேண்டும்.

மார்பு 1 செ.மீ. விரிவடையவேண்டும். விண்ணப்பங்களை www.fo-rests.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். இதையடுத்து இணையதளம் மூலமாக தேர்வு நடத்தப்படும். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, நடந்து செல்வதற்கான தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கு நேர்காணல் நடத்தப்படாது. 150 மதிப்பெண்கள் கொண்ட ஒரே தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது. ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். வனவருக்கு ரூ.35 ஆயிரத்து 900 முதல் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 500 வரை ஊதியம் வழங்கப்படும். வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளருக்கு ரூ.18 ஆயிரத்து 200 முதல் ரூ.57 ஆயிரத்து 900 வரை ஊதியம் வழங்கப்படும்.

Next Story