இடைத்தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்? திருநாவுக்கரசர் பேட்டி


இடைத்தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்? திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 28 Oct 2018 11:00 PM GMT (Updated: 28 Oct 2018 9:44 PM GMT)

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால், எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றதற்கு திருநாவுக்கரசர் பதில் அளித்தார்.

ஆலந்தூர்,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் 2 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும். 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலுடன் இந்த 2 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு தோல்வி பயத்தால் தலைமை செயலாளர் மூலமாக மழை பெய்யப்போகிறது என்று காரணம் கூறி தேர்தலை தள்ளி வைத்தது தவறு.

3-வது நீதிபதியின் தீர்ப்பால் 18 தொகுதிகள் காலியாகி உள்ளது. 30 நாளில் சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தால் தேர்தல் நடத்த முடியாது. சபாநாயகர் காலி இடங்கள் என அறிவித்தால்தான் தேர்தல் நடத்த முடியும்.

20 தொகுதிகளில் எம்.எல்.ஏ. கிடையாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாததால் மக்கள் பணிகள் நடக்கவில்லை. தமிழகத்தில் தேர்தல் வந்தால் நல்லது என்று மக்கள் நினைக்க தொடங்கி விட்டனர்.

சபாநாயகரின் தீர்ப்பு சரியா?, அரசு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?, நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொள்கிறார்களா? இல்லையா? என்பதை தேர்தல் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

இலங்கையில் பிரதமராக ராஜ்பக்சே பதவி ஏற்றதை ரனில்விக்ரம சிங்கேவே ஏற்கவில்லை. ராஜ்பக்சே ஆட்சி காலத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அது தமிழர்களுக்கு கசப்பான காலம். இலங்கை விவகாரம் குறித்து நான் சொல்வது சரியாக இருக்காது. இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள்தான் கருத்து சொல்ல வேண்டும்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும். பொதுத்தேர்தலில் எந்தந்த கட்சிகள் போட்டியிட்டதோ அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் மீண்டும் அந்த கட்சியே போட்டியிடுவது வழக்கம்.

அதன்படி 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் அந்த தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்ட இடங்களில் தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும். மேற்கொண்டு என்ன செய்வது என்பது பற்றி தி.மு.க.-காங்கிரஸ் தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள்.

அமெரிக்கா முழுவதும் ஓட்டு போட்டு, வளரும் தலைவருக்கான விருதுக்கு தமிழிசை சவுந்தரராஜனை தேர்ந்து எடுத்து உள்ளார்கள். உலகில் புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியலில் மோடிதான் கடைசி இடம். மோடியே நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு விருது கிடைத்து இருப்பதில் மகிழ்ச்சி. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள், தமிழக பெண் என்பதால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story