‘கஜா’ புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்குமா என்பது கேள்விக்குறி தான் மு.க.ஸ்டாலின் பேட்டி


‘கஜா’ புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்குமா என்பது கேள்விக்குறி தான் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 22 Nov 2018 11:45 PM GMT (Updated: 22 Nov 2018 11:31 PM GMT)

‘கஜா’ புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட ரூ.15 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்குமா என்பது கேள்விக்குறி தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தி.மு.க. சார்பில், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இருந்து 100 லாரிகளில் ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

ரூ.15 ஆயிரம் கோடி நிதி கிடைக்குமா?

கேள்வி:- தமிழக அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் கோடி கேட்கப்பட்டுள்ளது. அது பற்றி தங்களின் கருத்து?.

பதில்:- ‘கஜா’ புயல் பேரிழப்பு ஏற்பட்டவுடன் மத்திய அரசு உடனடியாக முன் பணம் வழங்கியிருக்க வேண்டும். அப்படி வழங்கவில்லை. மாநில அரசு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்து, அதன் பின்பு தான் உதவி வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. போர்க்கால அடிப்படையில் நிச்சயமாக முன்கூட்டியே கொடுத்திருக்க வேண்டும்.

இப்போது மாநில அரசின் சார்பில் ரூ.15 ஆயிரம் கோடி கேட்கப்பட்டு உடனடியாக வழங்கவேண்டும் என்று சொல்கிறார்கள். கடந்த கால வரலாற்றை எல்லாம் பார்க்கின்ற போது, அதை நிச்சயமாக வழங்குவார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகத்தான் உள்ளது. வழங்கினால் சிறப்பாக இருக்கும், வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி:- வான் வழியாகப் பார்த்தால் மட்டும் தான் மக்களின் துயரத்தை உணர்ந்துகொள்ள முடியும் என்று முதல்- அமைச்சர் கூறியிருக்கிறார். அதுபற்றி தங்களின் கருத்து?.

பதில்:- அதாவது ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ததாக அவரே ஒப்புக்கொள்கிறார். எனவே, இதுநாள் வரையில் 5 நாட்களாக அமைச்சர்கள் தான் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் இங்கு தான் இருக்கிறார்கள். அவர்கள் ஆய்வு எதுவும் செய்யவில்லையா?. முதல்-அமைச்சர் திடீரென்று ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்து விட்டு 5 மணி நேரத்தில் ஆய்வு நடத்தி முடித்துவிட்டு சென்று சொல்லியிருக்கிறாரா? இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, நம்ப முடியவில்லை.

கேள்வி:- தி.மு.க. காலத்தில் புயல் வந்தபோது ரூ.2 லட்சம் தான் கொடுத்தார்கள், நாங்கள் ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறோம், ஆனாலும் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று முதல்- அமைச்சர் கூறியுள்ளாரே?.

பதில்:- அது நடந்தது 10 வருடத்திற்கு முன்பு, அப்போதிருந்த விலைவாசி பொருளாதார சூழ்நிலை வேறு, இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலை வேறு. தரமாட்டோம் என்று சொல்லாமல், ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தந்து கொண்டிருக்கிறார் என்பது தான் என்னுடைய கணிப்பு.

கேள்வி:- ‘கஜா’ புயலைப் பொறுத்த வரையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், இது மக்கள் பிரச்சினை என்று கூறுகின்றனரே?.

பதில்:- தி.மு.க. தயாராக உள்ளது. அவ்வாறு, தயாராக இருக்கின்ற காரணத்தினால் தான் முதல் அறிவிப்பை தி.மு.க. அறிவித்தது மட்டுமில்லாமல், நிவாரணத்தொகையை தபால் மூலம் அனுப்பியிருக்கலாம், எனவே, அரசியல் பார்க்காமல் நேரடியாகச் சென்று முதல்-அமைச்சரை சந்தித்து நிவாரண தொகை கொடுத்தோம். நேரடியாக வந்து இந்தப் பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- மு.க.ஸ்டாலின் மக்களை தூண்டிவிட்டு, எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்று தம்பிதுரை சொல்லியிருப்பது பற்றி உங்களின் கருத்து?.

பதில்:- இதில் அரசியல் செய்வதற்கு நான் விரும்பவில்லை. இது மக்கள் பிரச்சினை இதில் கட்சியினுடைய பிரச்சினைகளை எல்லாம் பேசுவதற்கு தயாராகஇல்லை.

இணக்கமான செயல்பாடு எப்படி?

கேள்வி:- அ.தி.மு.க. - பா.ஜ.க.வோடு இணக்கமாகச் செயல்படுகிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறீர்கள். ஆனால் நிதி கொடுப்பதில் மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?.

பதில்:- இணக்கமாக செயல்படுகிறது என்றால், செய்து கொண்டிருக்கிற ஊழலுக்கு, செய்து கொண்டிருக்கிற கலெக்சனுக்கு, கமிசனுக்கு, கரப்சனுக்கு மத்திய அரசு துணை நிற்கிறது. அதற்காக இவர்கள் இணக்கமாக செயல்படுகிறார்கள். அதுதான் விஷயம், இணக்கமாக செயல்படுவது என்பது என்னவென்றால், கேட்ட நிதியை போராடி, வாதாடி வாங்கி வரவேண்டும். அதுதான் இணக்கமாக செயல்படுவது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சென்றார். அப்போது அவர் செங்கிப்பட்டி, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, இடையாத்தி பாலம், வாட்டாத்தி கொள்ளக்காடு, சீதாம்பாள்புரம், துறவிக்காடு, புனவாசல், ஒட்டங்காடு, கொன்னக்காடு, செருவாவிடுதி, திருச்சிற்றம்பலம், அம்மையாண்டி, ஆவணம், கைகாட்டி, மாங்காடு, அணவயல், வடகாடு, கீழாத்தூர், ஆலங்குடி, திருவரங்குளம், புதுக்கோட்டை, திருவப்பூர், நார்த்தாமலை, கீரனூர் உள்ளிட்ட ஊர்களில் புயலால் சேதம் அடைந்த இடங்களை நேரில் பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். அவருடன் தி.மு.க. நிர்வாகிகளும் சென்று இருந்தனர்.

Next Story