புயலின் கொடூரத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு இனியாவது விரைந்து செயல்பட வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


புயலின் கொடூரத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு இனியாவது விரைந்து செயல்பட வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 Nov 2018 11:27 PM GMT (Updated: 23 Nov 2018 11:27 PM GMT)

புயலின் கொடூரத்தில் இருந்து மக்களை காப்பாற்ற இனியாவது தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடித வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு வார காலம் கடந்த பிறகும், கஜா புயலால் தாக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் இயல்புநிலை திரும்பவில்லை. இயல்புநிலை திரும்பிட இன்னும் காலம் ஆகும் எனத் தெரிகிறது. ஆட்சியாளர் களோ அரை மணி நேரம் கூட செலவிட அக்கறையின்றி ஹெலிகாப்டரில் ஆலவட்டம் சுற்றிவிட்டு போய்விட்டனர். இந்த உண்மையை சொன்னால் பேரிடர் நேரத்திலும் அரசியல் செய்கிறாரா எதிர்க்கட்சித் தலைவர் என்று தி.மு.க. மீது பாய்ந்து, திசைதிருப்ப பார்க்கிறார்கள்.

தி.மு.க.வை பொறுத்தவரை, புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைத்திட வேண்டும் என்பது ஒன்றே இலக்காகும். மற்ற மாவட்டங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மை என்பது அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உரிய வகையில் நிவாரணம் வழங்குவதுமாகும். இவை இரண்டிலும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் போதிய கவனம் செலுத்தும் குணமில்லாததால் மக்களின் கோபாவேசத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். அதனை ஒளிவுமறைவின்றி எடுத்துச்சொல்ல வேண்டியது பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் கடமை.

எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன என்றால் அவர்களை அழைத்து, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கூறுங்கள் எனக்கேட்டு, அதனடிப்படையில் மத்திய அரசிடம் அறிக்கை அளித்து, சேத மதிப்பீட்டிற்கேற்ற நிவாரணத்தைப் பெறவேண்டியது ஆளுங்கட்சியின் கடமை. இங்கே அவசரக்கோலத்தில் மதிப்பீடு செய்து, வேகவேகமாக டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து நிவாரணம் கோரியிருக்கிறார் முதல்-அமைச்சர். டெல்லி செல்வதில் இருந்த அவசரம், நிவாரண பணிகளில் இல்லையே என்ற கேள்வியைத்தான் எதிர்க்கட்சியினர் கேட்கிறோம். கேட்பதுடன் நிறுத்தவில்லை, நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தக் கோருகிறோம்.

நிவாரணப் பணிகளை வழங்கும் முக்கிய கடமையையும் தி.மு.க. தொடர்ந்து மேற்கொள்கிறது. முதல்-அமைச்சரிடம் தி.மு.க. சார்பிலான 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை கட்சியின் பொருளாளர் துரைமுருகன் நேரில் அளித்திருக்கிறார். கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிவாரண நிதியாக வழங்க உள்ளோம். 4 கோடி மதிப்பிலான நிதியுடன் நமது பணி முடிந்துவிடவில்லை. கழக மகளிரணி சார்பிலும், சென்னை மேற்கு மாவட்டம் உள்பட பல மாவட்டங்களை சார்ந்த தி.மு.க.வினர் சார்பிலும் தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் டெல்டா மாவட்டங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மகத்தான மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினரையும், பொதுமக்களையும் மனமார வாழ்த்துகிறேன்.

புயலின் கொடூரத்திலிருந்து ஒருவார காலமாகியும் விடுபடாமல் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இது குற்றச்சாட்டு அல்ல. கோரிக்கை. கண்ணீர் கலந்த வேண்டுகோள். மக்களின் துயர் துடைக்க உதவிக்கரங்கள் நீளட்டும். புயல் சேதத்தை முழுமையாக மதிப்பிடாத நிலையில், மத்திய அரசிடம் 15 ஆயிரம் கோடி நிவாரணத்தொகை கேட்டுள்ளது மாநில அரசு.

தமிழ்நாடு என்றால் பல வகையிலும் வஞ்சித்துவரும் மத்திய அரசு, இந்த முறையாவது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படாமல், இந்தியத் தாயின் கடைக்கோடிப் பிள்ளை தவியாய்த் தவிப்பதை உணர்ந்து, தாய்மை உணர்வு கொண்டு நிவாரண நிதியினை தாராளமாக வழங்கிட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நிதி மக்களை சென்றடையும் வரை தி.மு.க. வினர் களப்பணியில் ஈடுபட்டு, கஜா புயலின் தாக்குதலால் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் தொடர்ந்து கை கொடுத்து, வடியும் கண்ணீரைத் துடைத்திடுவீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story