அரைகுறை அறிக்கை தாக்கல் பள்ளி கல்வித்துறை செயலாளர், இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


அரைகுறை அறிக்கை தாக்கல் பள்ளி கல்வித்துறை செயலாளர், இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 Jan 2019 10:30 PM GMT (Updated: 22 Jan 2019 8:53 PM GMT)

தனியார் பள்ளி தொடர்பான வழக்கில் அரைகுறையாக அறிக்கை தாக்கல் செய்ததால், பள்ளி கல்வித்துறை செயலாளர், இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தமிழக நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகாவில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் 4 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் செயல்படுகின்றன’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு 3-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, 4 பள்ளிகள் குறித்தும், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒரே ஒரு பள்ளி மட்டும் அனுமதி பெறவில்லை. அதற்கு 2017-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அந்த பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை ஏதாவது விதிக்கப்பட்டுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு இல்லை என்று சிறப்பு அரசு பிளடர் முனுசாமி கூறினார். இதையடுத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘தடை எதுவும் விதிக்காத பட்சத்தில் அனுப்பிய நோட்டீசின் அடிப்படையில் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை அதிகாரிகள் செய்யவில்லை. அதனால், அனுமதியின்றி அந்த பள்ளி தொடர்ந்து செயல்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தனர். அடுத்த விசாரணைக்கு முன்பாக, அந்த பள்ளி மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டோம். ஆனால் 4 பள்ளிகளை மட்டும் குறித்து அறிக்கை தாக்கல் செய்த அதிகாரிகள், வேறு எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை. இப்படி ஒரு அரைகுறை அறிக்கையை தாக்கல் செய்ததால், பள்ளி கல்வித்துறை செயலாளர், இயக்குனர் மற்றும் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிப்ரவரி 21-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Next Story