9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்; ஆயிரக்கணக்கான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது


9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்; ஆயிரக்கணக்கான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2019 1:26 PM GMT (Updated: 23 Jan 2019 1:26 PM GMT)

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.  இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.

1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 51 ஆசிரியர் சங்கங்கள், 114 அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடத்தினர்.

சென்னையில் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று முதல் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். சென்னையில் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி முன்பும், நாளை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும், நாளை மறுதினம் எழிலகம் முன்பும் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, கடலூர், திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story