நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 4 Feb 2019 7:37 PM GMT (Updated: 4 Feb 2019 7:37 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை செயலாளரும், வருவாய்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார், சேவூர் ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் ஜே.சி.டி. பிரபாகர், அமைப்பு செயலாளர் பொன்னையன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி பேசினர். கூட்டத்தில், வரும் 24-ந் தேதி வரும் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

* ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி இளைஞர் பெருவிழாவை நடத்தவும், கிராமங்கள் தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தவும், இந்த ஆண்டு முழுவதும் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.

* சட்ட ரீதியான அனுமதியை பெற்று, ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா சிலையை திறக்க இந்த கூட்டம் சூளுரை ஏற்கிறது.

* ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந் தேதியை பசிப்பிணி தீர்க்கும் திருநாளாக அறிவித்து, சமபந்தி போஜனம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சரையும், துணை முதல்-அமைச்சரையும் இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது. அதேபோல் விலையில்லா சைக்கிள் திட்டத்திற்கு ஜெயலலிதா மிதிவண்டி திட்டம் என பெயர் சூட்ட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும்.

* முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும். இதற்காக ஜெயலலிதா பேரவை கடுமையாக உழைக்கும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாடாளுமன்ற பொது தேர்தலை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். இந்த தேர்தலில் முதல் அணியாக ஜெயலலிதா பேரவை தேர்தல் பணி ஆற்ற வேண்டும். அம்மா வகுத்து கொடுத்த பாதையில் நாம் வெற்றியை ஈட்ட வேண்டும். எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் மத்தியில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்த வெற்றியில் தான் கட்சியின் எதிர்காலம் இருக்கிறது. 40 தொகுதியில் விருப்பமனுக்களை வாங்க தொடங்கியிருக்கிறோம். ஆர்வத்துடன் எல்லோரும் வந்து வாங்கியிருக்கிறார்கள். இதுவே நம் வெற்றிக்கு சான்று. கூட்டணிக்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. விரைவில் இது குறித்து அறிவிப்போம். கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள இடத்தில் அ.தி.மு.க. போட்டியிடும். கூட்டணிக்கு நாம் தான் தலைமை தாங்கப்போகிறோம். வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியதாக, நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.

Next Story