தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2019 11:30 PM GMT (Updated: 24 Feb 2019 11:11 PM GMT)

தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் ஜெயலலிதாவின் பெயரில் அழைக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை,

சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதல் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த விழா நடந்து கொண்டிருக்கும் போதே, தேனியில் இருந்து ஒருவர் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளரிடம், “தனக்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் என்னுடைய வங்கி கணக்கில் வந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார். உத்தரபிரதேசத்தில் இந்த திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்த மறு நொடியிலேயே அவருடைய வங்கி கணக்கில் அந்தப் பணம் வந்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளின் விவரங்கள் மத்திய அரசின் வலைத்தளத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.277 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்தியதன் விளைவாக கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை உணவு தானிய உற்பத்தி 1 கோடி டன்னை தாண்டி, மத்திய அரசின் ‘கிரிஷி கர்மான்’ விருதை தமிழ்நாடு அரசு தொடர்ந்து 4 முறை பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் 10 உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் நிறுவப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்த தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானிலும் உணவு பூங்கா அமைக்க முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அந்த பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி அவரது பிறந்தநாளில் இதை அறிவிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் ஜெயலலிதாவின் பெயரில் அழைக்கப்படும் என்று அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
இந்த திட்டத்துக்கு நூறு சதவீதம் மத்திய அரசுதான் நிதி வழங்குகிறது. மாநிலங்களுக்கு இதில் நிதிச்சுமை இல்லை. பல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கும் இதே நிலையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்.

உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் நிர்வாக சவால்கள் எழக்கூடும். ஆனால் மத்திய மற்றும் தமிழக அரசுகள் திறம்பட செயல்பட்டுள்ளன. விடுபட்ட விவசாய குடும்பங்களும் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான உதவி தொகையும் விரைந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி வரவேற்றார். வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார். இறுதியில், சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் சான்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Next Story