பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்


பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகள் வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 21 April 2019 12:00 AM GMT (Updated: 20 April 2019 11:44 PM GMT)

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 91.3 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை,

தேர்வு முடிவுகளை செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தி மூலமாகவும், இணையதளத்திலும் பார்த்து மாணவ-மாணவிகள் தங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர்.

மாணவ-மாணவிகள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தில் தலைமை ஆசிரியர் வழியாக 20-ந்தேதி(நேற்று) முதல் வருகிற 26-ந்தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வித்துறை அறிவித்து இருந்தது.

அதன்படி, நேற்று காலையில் இருந்து மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியல் வாங்க ஆர்வமுடன் சென்றனர். பல பள்ளிகள் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினர். ஆனால் சில பள்ளிகளில் இணையதள சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால், பிற்பகலுக்கு மேல் மதிப்பெண் பட்டியலை வழங்கினர். அதையும் மாணவ-மாணவிகள் காத்து இருந்து வாங்கிச் சென்றனர்.

வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Next Story