குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Oct 2019 7:32 AM GMT (Updated: 29 Oct 2019 8:28 AM GMT)

சுஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜித் வில்சன், தவறி விழுந்தான். இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அயராத முயற்சியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தனர். 

80 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்ற நிலையில்,   இன்று (அக்.,29) அதிகாலை, சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். சுஜித் நலமுடன் மீட்கப்படுவான் என்று அவரது குடும்பத்தினர் உள்பட தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், சுஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த நிலையில், மீட்கப்பட்ட சுஜித்தின்  உடலுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர், அங்கிருந்து  கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதுர் கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  சுஜித்தின் உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றது. கல்லறை தோட்டத்தில், வைக்கப்பட்ட சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்கு பிறகு, சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி  பாத்திமாபுதூரில் உள்ள  சிறுவன் சுஜித் கல்லறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடுக்காட்டுப்பட்டியில் சுஜித்தின் பெற்றோரை நேரில் சந்தித்து ஸ்டாலின். ஆறுதல் கூறினார். கே.என்.நேரு, திருநாவுக்கரசர், திருச்சி சிவா, ஜோதிமணி ஆகியோரும் ஆறுதல் கூறினர்.

சுஜித்தை இழந்து வாடும் பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி தம்பதிக்கு மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். 

பின்னர் நிருபர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

36 அடி ஆழத்தில் இருந்தபோதே, குழந்தையை மீட்டிருக்க முடியும், பேரிடர் மீட்பு படையை உடனடியாக அழைத்திருக்க வேண்டும்.

மீட்பு பணியை பொறுத்தவரை, அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது. இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்க்க வேண்டும் .

குழந்தை சுஜித்தை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை? பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையோ என்ற ஆதங்கம் உள்ளது என கூறினார்.

Next Story