போர்க்குற்ற விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவிப்பு: ‘இலங்கைக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்’ - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


போர்க்குற்ற விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவிப்பு: ‘இலங்கைக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்’ - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Feb 2020 8:45 PM GMT (Updated: 27 Feb 2020 6:50 PM GMT)

‘போர்க்குற்ற விசாரணையில் இருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துள்ளதற்கு நட்பு நாடுகளை திரட்டி அந்நாட்டிற்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்’ என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

இலங்கைப்போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த பன்னாட்டு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் அந்நாடு அறிவித்திருக்கிறது. போர்க்குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான இலங்கை அரசின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும்.

ஈழத்தமிழர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவர்களின் உறவினர்களுக்கும் இப்போதுள்ள ஒரே ஆறுதல், இலங்கை போர்க்குற்ற விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் உறுதியாக இருப்பது தான்.

மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யவிருக்கும் அறிக்கையில், ஈழத்தில் 1½ லட்சம் அப்பாவித்தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பான போர்க்குற்ற விசாரணை இலங்கை அரசு முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு இந்தியா முழு ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

எனவே, மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நட்பு நாடுகளை ஒன்று திரட்டி, இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இலங்கை போர்க்குற்ற விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை மனித உரிமை ஆணையத்தில் இந்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

பீகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பா.ம.க.வின் கொள்கையும் இது தான். பீகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பீகார் மாநிலத்தை போலவே 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும்.

அசாம் மாநிலத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருப்பதும், அதை உள்துறை மந்திரி அமித்ஷா வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை. தமிழக சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு. தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக மக்களிடம் நிலவி வரும் அச்சத்தையும், சந்தேகத்தையும் அரசு போக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story