சொகுசு காருக்கு நுழைவு வரி வழக்கில் நடிகர் விஜய் மீதான அபராதத்துக்கு இடைக்கால தடை!


சொகுசு காருக்கு நுழைவு வரி வழக்கில் நடிகர் விஜய் மீதான அபராதத்துக்கு இடைக்கால தடை!
x
தினத்தந்தி 27 July 2021 11:23 AM GMT (Updated: 2021-07-27T16:53:21+05:30)

சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து, நுழைவு வரியை ஒரு வாரத்தில் கட்ட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை

இங்கிலாந்து நாட்டில் இருந்து 2012ஆம் ஆண்டு நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை தென்சென்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். அப்போது தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியைச் செலுத்த உத்தரவிடப்பட்டது.

இந்த நுழைவு வரித்தொகை அதிகமாக உள்ளதால், வரியை ரத்து செய்யக் கோரி சென்னைஐகோர்ட்டில்  2012ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்  நுழைவு வரித் தொகையில் 20 சதவீதத்தைச் செலுத்திவிட்டு காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள உத்தரவிட்டது.

இதனிடையே நுழைவு வரி கட்டுவதிலிருந்து விலக்கு கோரி விஜய் தரப்பு தாக்கல் செய்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமண்யம், வழக்கைத் தள்ளுபடி செய்து, ரூ.1 லட்சம் அபராதம் (வழக்குச் செலவு) விதித்து உத்தரவிட்டார்.

மேலும், வரி கட்டுவது என்பது சமூகப் பங்களிப்பு. அது நன்கொடையல்ல. ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில்  மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், “நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை. அந்த உத்தரவை மதிக்கிறோம். நுழைவு வரி செலுத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால், நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதம் விதித்தது, மனுதாரர் குறித்து தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை ரத்து செய்ய வேண்டும்.

தனி நீதிபதியின் உத்தரவு நடிகர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இதே கோரிக்கையுடன் பலர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மனுதாரரான நடிகர் விஜய் மீது மட்டும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல.

தனி நீதிபதி மனுதாரரை தேச விரோதியாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, அந்தக் கருத்துகளை நீக்க வேண்டும். வழக்கு தொடர்ந்தபோது நுழைவு வரி வசூலிக்கக் கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவுகள் அமலில் இருந்ததால் வழக்குத் தொடரப்பட்டது.

எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் இடம்பெற்றுள்ள கருத்து மற்றும் அபராதத்தை நீக்க வேண்டும். வணிக வரித் துறையினர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டாலும் அதனை 7 முதல் 10 நாட்களுக்குள் செலுத்தத் தயாராக இருக்கிறோம்” என வாதிட்டார்.

அப்போது அரசுத் தரப்பில், தனி நீதிபதியின் விமர்சனம் மற்றும் அபராதம் குறித்து தெரிவிக்க எதுவும் இல்லை. நுழைவு வரியைக் கணக்கிட்டுக் கூறுகிறோம், 2012ஆம் ஆண்டுக் கணக்கீட்டின் படி ஏற்கெனவே செலுத்தியுள்ள 20 சதவீதம் போக எஞ்சியத் தொகையை செலுத்தினால் போதும்” என வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். ஏற்கெனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, எஞ்சியுள்ள 80 சதவீதத்தை ஒரு வாரத்துக்குள் நடிகர் விஜய் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story