சென்னை ஏழுகிணறில் உள்ள ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்படுகிறது அமைச்சர் தகவல்


சென்னை ஏழுகிணறில் உள்ள ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்படுகிறது அமைச்சர் தகவல்
x

சென்னை ஏழுகிணறில் உள்ள ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கும் பணி நடந்து வருவதாக சேகர்பாபு கூறினார்.

சென்னை,

ராமலிங்க அடிகளாரின் பிறந்தநாளையொட்டி சென்னை ஏழுகிணறு பகுதியில், அவர் வாழ்ந்த இல்லத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

ராமலிங்க அடிகளாரின் பிறந்தநாளில் அவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். இதுவரை எந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் அவரின் வீட்டை ஆய்வு செய்ததில்லை. முதல் முறையாக அறநிலையத்துறை அமைச்சராக நான் பார்வையிட்டுள்ளேன். ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலாரின் மணிமண்டபம் அமைக்க, வரைபடம் தயார் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நகைகளை உபயோகப்படுத்தும் திட்டத்திற்கு 3 மண்டலமாக சென்னை, மதுரை, திருச்சி என பிரித்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவில் நகைகள்

ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த நகைகள் இல்லாமல், தற்பொழுது பயன்பாட்டில் இருக்கக்கூடிய நகைகள் உருக்குவதற்கான வேலைகள் தொடரும். திருவேற்காட்டில் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து ஒரு குண்டு மணி அளவில் கூட முறைகேடு நடக்காது. வெளிப்படை தன்மையோடு தொடங்குவோம். எந்த தவறும் நடக்காது. ஏற்கனவே திருச்சி, சமயபுரம் கோவிலில் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

நகைகள் உருக்கும் திட்டத்திற்கு பா.ஜ.க. கண்மூடித்தனமாக எதிர்க்கிறது, நகைகள் பயன்படாமல் வைத்திருப்பதால் யாருக்கு என்ன லாபம், அவர்கள் ஏதேனும் திட்டம் வைத்திருந்தால் செயல்படுத்தட்டும், மதம், இனம் வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார் அதை நானும் செய்யமாட்டேன். எம்மதமும் சம்மதம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழிபாட்டுத்தலங்களில் எப்போது, பக்தர்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ‘கொரோனா தொற்று யாருக்கும் பரவவில்லை என்ற நிலை வரும்போது, அனைத்து கோவில்களும் திறக்கப்படும், தெய்வங்களுக்கு பூஜை தொடர்ந்து நடைபெறும்' என்றார்.

Next Story