மோடியுடன் மு.க.ஸ்டாலின் பேசி அலங்கார ஊர்திக்கு அனுமதி பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


மோடியுடன் மு.க.ஸ்டாலின் பேசி அலங்கார ஊர்திக்கு அனுமதி பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Jan 2022 6:56 PM GMT (Updated: 18 Jan 2022 6:56 PM GMT)

பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாக பேசி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிட்டு பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழக அரசின் சார்பில் பங்குபெற இருந்த அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும், தென் இந்தியாவிலிருந்து கர்நாடக அரசின் ஊர்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி வந்துள்ளது வருத்தம் அளித்துள்ளது.

2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுநோய் காரணத்தை காட்டி ஹஜ் புனித பயணத்துக்கு மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களின் பெயர் பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் நீக்கப்பட்டது. ஹஜ் புனித யாத்திரைக்கு செல்ல சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடரவேண்டும் என வலியுறுத்தி நான் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். முதல்-அமைச்சரும், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தீர்வு காணவேண்டும்

தமிழ்நாட்டினுடைய கலை, கலாசாரம், பண்பாடு, விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆகியவற்றை மத்திய அரசிடம் விளக்கி அலங்கார ஊர்திக்கான அனுமதியை பெற்றே ஆகவேண்டும். பொதுவாக, ஹஜ் பயணிகள் புறப்படும் இடத்தை தேர்வு செய்தல், அலங்கார ஊர்திகளை இடம்பெற செய்தல் போன்ற முடிவுகள் எல்லாம் அதிகாரிகள் மற்றும் அதற்கான குழுக்கள் மட்டத்தில் எடுக்கக்கூடிய ஒன்று.

எனவே இந்தியாவின் பிரதானமான 4 நகரங்களில் சென்னை ஒன்று என்பதையும், இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்பதையும், தமிழ்நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு, விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆகியவற்றை மாநில அரசு அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் மூலம் மத்திய அரசு அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறி, அதிகாரிகள் மட்டத்திலேயே அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிரமம் இருந்தால், தமிழ் மொழியின் சிறப்பை ஆங்காங்கே போற்றிவரும் பிரதமரின் கவனத்துக்கு நேரடியாக எடுத்துச்சென்று பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.

மோடியுடன் தொலைபேசியில்...

குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்தை சேர்ப்பதை பொறுத்தவரை, அதன் அவசரத்தன்மையை கருதி முதல்-அமைச்சர், பிரதமருக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளார். இந்த 2 கோரிக்கைகளுக்கும் அ.தி.மு.க. தனது முழு ஆதரவை நல்கும்.

முதல்-அமைச்சர், பிரதமரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருகின்ற குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பாக அலங்கார ஊர்தி பங்கேற்பதையும், ஹஜ் புனிய யாத்திரைக்கான விமான நிலைய பட்டியலில் சென்னை சேர்க்கப்படுவதையும் உறுதி செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story