குலமாணிக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை


குலமாணிக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
x

குலமாணிக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

குலமாணிக்கம் கிராமம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட குலமாணிக்கம் ஊராட்சி மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. குலமாணிக்கம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் கால்நடை வளர்த்தல் மற்றும் விவசாயமாகும். இந்தநிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் குலமாணிக்கம் ஊராட்சியின் முக்கிய சாலையான அம்பேத்கர் நகர் முதல் மசூதி வரையிலான சுமார் ஒரு கிலோமீட்டர் சாலையை மேம்படுத்தப்பட்ட சாலையாக தரம் உயர்த்தும் வகையில் பழைய சாலையை அப்புறப்படுத்திவிட்டு புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்களை நிரவி மண்ணை கொட்டி சமன்படுத்தினர்.

இந்தநிலையில் ஒருசில காரணங்களுக்காக சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் சாலைக்காக போடப்பட்ட மண் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு தற்போது ஜல்லிக்கற்களாக சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடக்கக்கூட முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள்.

அடிப்படை வசதிகள்...

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் இந்த சாலை வழியாக விவசாய இடுபொருட்கள் மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் எல்லை பகுதியில் குலமாணிக்கம் கிராமம் அமைந்து இருப்பதால் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

குண்டும், குழியுமான சாலை

ராஜேந்திரன்:- திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட குலமாணிக்கம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள முக்கிய சாலையான அம்பேத்கர் நகர் முதல் மசூதி வரையிலான சுமார் ஒரு கிலோமீட்டர் சாலையை சீரமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் ஒருசில காரணங்களுக்காக நிறுத்தப்பட்டன. அதன்பிறகு இந்த பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் அந்த சாலை தற்போது மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

கல்லூரி பேராசிரியர் வளனறிவு:- குலமாணிக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மணல் உள்ளிட்ட கனிமங்களில் இருந்து அரசுக்கு பெருமளவில் வருமானம் கிடைத்தாலும் எங்கள் ஊராட்சியின் சாலையை தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் தயங்குவது ஏன் என்பது புரியவில்லை. அரியலூரில் இருந்து எங்கள் ஊருக்கு வந்த நகர பஸ் கடந்த சில மாதங்களாக வருவதில்லை. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தவில்லை. இதனால் விபத்து மற்றும் பேறுகாலங்களில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையம்

வாசுகி:- குலமாணிக்கம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். ஆனால் இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் அருகே உள்ள திருமழபாடி, திருமானூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறோம். இரவு நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு பிரசவலி ஏற்பட்டால் அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் இந்த சாலை வழியாக வர மறுக்கிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story