சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: 50-க்கும் மேற்பட்ட பழமையான கார்கள் இடம் பெற்றன


சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: 50-க்கும் மேற்பட்ட பழமையான கார்கள் இடம் பெற்றன
x

சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற பாரம்பரிய கார் கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட பழமையான கார்கள் இடம்பெற்றன..

சென்னை,

சென்னை கொட்டிவாகம், பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் இந்திய வரலாற்று கார்கள் சங்கம் சார்பில் தேசிய அளவிலான பாரம்பரிய கார்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். அவருடன் சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகர் வருகை தந்திருந்தார்.

கண்காட்சியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டார். அவர் பல்வேறு பாரம்பரிய கார்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். கண்காட்சியில் 1926 முதல் 1980 வரையிலான போர்டு, பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்குவார் உள்ளிட்ட பல்வேறு வகையான 68 பாரம்பரிய கார்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இடம் பெற்று இருந்தன.

செல்பி எடுத்தனர்

அதே போன்று ராயல் என்பீல்டு, எஸ்.டி. - ஜாவா உள்ளிட்ட மிகவும் பழமையான 12 மோட்டார் சைக்கிள்களும் இடம் பெற்றிருந்தன. கார் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை இந்திய வரலாற்று கார்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பிரதாப், செயலாளர் வி.எஸ்.கைலாஷ், துணைத் தலைவர் ராஜேஷ் அம்பாள் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ஆண்களும், பெண்களும் கார் கண்காட்சியை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் பழைய பாரம்பரிய கார்கள் முன்பு நின்று செல்பி எடுத்தும், கார் உரிமையாளர்களுடன் காரை பராமரிக்கும் ரகசியம் குறித்த விவரங்களை கேட்டு உரையாடியும் மகிழ்ந்தனர்.

போக்குவரத்து விழிப்புணர்வு

கார் கண்காட்சி குறித்து இந்திய வரலாற்று கார்கள் சங்கத்தின் செயலாளர் வி.எஸ்.கைலாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல் முறையாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாரம்பரிய கார் உரிமையாளர்களும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்து இந்த கார் கண்காட்சியை நடத்தி உள்ளோம். மும்பை, டெல்லி, கொல்கத்தா, கோவா, பெங்களூரு, ஐதராபாத், பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில நகரங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கார்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. இந்த கார் கண்காட்சியை ஆண்டு தோறும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

வெளிநாட்டவர்கள் கார்களை உற்பத்தி செய்திருந்தாலும், அவற்றை பராமரிப்பதில் நாம் தான் மிகவும் சிறந்து விளங்குகிறோம். இது போன்ற கண்காட்சிகளை நடத்துவதன் மூலம் கார்களை பராமரிப்பதற்கான வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வும் ஏற்படுகிறது.

புதுச்சேரியில்....

இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும், நாளை (இன்று) காலை 7.15 மணிக்கு இங்கிருந்து பேரணியாக புறப்பட்டு புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story