கவர்னர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம்


கவர்னர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம்
x
தினத்தந்தி 13 Feb 2024 4:52 AM GMT (Updated: 13 Feb 2024 5:24 AM GMT)

உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அவைக்கு கவர்னர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு வந்தடைந்தார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டசபை துவங்கியது. இதற்குப் பிறகு கவர்னர் உரையை வாசிக்க ஆரம்பித்த கவர்னர் ஆர்.என். ரவி, சட்டசபை துவங்கும் முன்பாகவும் முடியும்போதும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார்.

மேலும், கவர்னர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்றும் கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி அமர்ந்தார். இதையடுத்து, கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்தார். சபாநாயகர் அப்பாவு அதனை சொல்லி முடித்ததும், கவர்னர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், "மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்... விதி எண். 220ன் படி நேற்று (12.02.2024) கவர்னர் உரையின்போது சட்டசபையில் கவர்னரின் பேச்சு குறித்து அவை நீக்கப்பட்ட சில பகுதிகளை உள்நோக்கத்தோடு சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட கவர்னரின் செயல்பாடுகள் குறித்து அவை உரிமை மீறல் தீர்மானத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story