வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை குமரிகடல் பகுதியை சென்றடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை குமரிகடல் பகுதியை சென்றடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
x

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இலங்கை கடலோர பகுதியை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்தது. நேற்று இரவு 11.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு, தென் கிழக்கே நிலை கொண்டிருந்தது.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து 480 கிலோமீட்டர் கிழக்கேயும் அது நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சற்றே வலுகுறைந்து மேற்கு-தென் மேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை கடலோர பகுதியை அடையும்.

அதன்பிறகு நாளை (26-ந்தேதி) காலையில் மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிக்கு சென்றடையும்.

இதனால் இன்றும், நாளையும் தமிழகத்துக்கு கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்கள், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரிகடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று 45 முதல் 55 மீட்டர் வேகத்தில் வீசும். இடையில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story