மின்சார ரெயில்கள் ரத்து: மெட்ரோ ரெயில் சேவை இன்று கூடுதலாக இயக்கம்


மின்சார ரெயில்கள் ரத்து: மெட்ரோ ரெயில் சேவை இன்று கூடுதலாக இயக்கம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 18 Feb 2024 12:47 AM GMT (Updated: 18 Feb 2024 6:56 AM GMT)

இன்று காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை, காஞ்சீபுரம் - கடற்கரை, திருமால்பூர் - கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயில் சென்ட்ரல் மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மெட்ரோ ரெயில்களில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, இன்று நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் வழக்கமாக மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையில் இயக்கப்படும் ரெயில் சேவைக்குப் பதிலாக காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ரெயில்கள் இயக்கப்படும். மேலும், காலை 05:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், இரவு 08:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story