ரெயில் முன் தள்ளி மாணவி கொலை: சென்னையில் நடந்த துயரம், தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது - மு.க.ஸ்டாலின்


ரெயில் முன் தள்ளி மாணவி கொலை: சென்னையில் நடந்த துயரம், தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது -  மு.க.ஸ்டாலின்
x

காதலிக்க மறுத்ததால் மாணவி சத்யாவை ரெயில் முன் தள்ளி கொன்ற கொடூரம் சென்னையில் நடந்தது. “இதுபோன்ற ஒரு துயரம் தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாது” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்து இருக்கிறார்.

சென்னை புறநகர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது.

மாணவி சத்யா

சென்னையை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். அவருடைய மனைவி ராமலட்சுமி. ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலைபார்த்து வருகிறார்.

அவர்களுடைய மூத்த மகள் சத்யா (வயது 20) தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

அவரது எதிர் வீட்டில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகன் சதீஷ் (23). இவருக்கும், மாணவி சத்யாவுக்கும் காதல் இருந்து வந்தது.

ரெயில் முன் தள்ளி கொலை

இந்த நிலையில் சதீஷின் நடவடிக்கைகள் சரி இல்லை என்பதை கூறி அவருடன் பழகுவதை நிறுத்திக்கொள்ளுமாறு மாணவி சத்யாவை, அவருடைய பெற்றோர்கள் அறிவுறுத்தினார்கள்.

பெற்றோரின் அறிவுரையை கேட்டுக்கொண்ட சத்யா, அன்று முதல் சதீஷிடம் இருந்து விலகி வந்து இருக்கிறார். "என்னை மறந்து விடு, எனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்" என்று அவரிடம் கூறி இருக்கிறார்.

இதனால் சதீஷ் விரக்தி அடைந்தார். கடந்த வியாழக்கிழமை சென்னை புறநகரில் உள்ள பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சத்யாவை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, அந்த வழியாக வந்த மின்சார ரெயில் முன் சத்யாவை காலால் உதைத்து தள்ளி கொடூரமாக கொன்றுவிட்டார்.

மு.க.ஸ்டாலின் உருக்கம்

நெஞ்சை பதறவைக்கும் இந்த துயரச்சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உருக்கமாக பேசினார். சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைத்த அவர், இதுபற்றி கூறியதாவது:-

ஒரு முக்கியமான வேதனையான விஷயத்தை இங்கு, நான் சொல்கிறேன். சென்னையில் மாணவி சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போயிருக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழக்கூடாது. இதுவல்ல நாம் காண விரும்பக்கூடிய சமூகம். இனி எந்த பெண்ணுக்கும் இதுபோல நடக்காமல் தடுக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அறிவாற்றலிலும், தனித்திறமையிலும், சமூக நோக்க மனப்பான்மையிலும் சிறந்தவர்களாக அவர்களை பெற்றோர் வளர்க்க வேண்டும். பாடப்புத்தகக் கல்வி மட்டுமல்ல, சமூகக்கல்வியும் அவசியமானது. தன்னைப்போலவே பிற உயிரையும் மதிக்க, பாதுகாக்க கற்றுத்தர வேண்டும். நல்லொழுக்கமும், பண்பும் கொண்டவர்களாக அவர்கள் வளர்ந்து, வாழ்ந்து இந்த சமூகத்துக்கான தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும்.

பெற்றோர்களுக்கு பொறுப்பு

அவர்கள் எந்த வகையிலும் திசைமாறி சென்றுவிடாதபடி வளர்க்கவேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் இருக்கிறது. இயற்கையில் ஆண் வலிமையுடையவனாக இருக்கலாம். அந்த வலிமை அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது. பெண்களை பாதுக்காக்கக்கூடியதாக இருக்க வேண்டும். சில இளைஞர்கள் என்னமாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பள்ளி, கல்லூரிகளும், பெற்றோரும் சேர்ந்து இளைய சக்திகளை பாதுகாக்கும் வகையில் அவர்களை வளர்க்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

வேலைவாய்ப்பு முகாம்

முன்னதாக சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆகியவை சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அதை தொடங்கி வைத்து, இதுவரை நடந்த முகாம்களில் வேலைவாய்ப்பை பெற்றவர்களில் ஒரு லட்சமாவது நபருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

"ஏற்கனவே வெவ்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டிருக்கிறது என்றாலும், 234 தொகுதிகளிலும் நீங்கள் முகாம் நடத்தவேண்டும். இந்த முகாம் எனக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது. ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்குவதுதான் மிகுந்த பெருமை.

ஒரு லட்சம் பேருக்கு வேலை

இன்றைக்கு வேலையின்மை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. கொரோனா பரவல் அச்சுறுத்தல், புதிய வேலைவாய்ப்புகளுக்கு சவாலாக இருந்தது. அதை அப்படியே விட்டுவிடாமல், ஒரு லட்சம் பேருக்கு இந்த ஓராண்டு காலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளோம். தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த ஒரு லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சியில் 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 15 மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பெரிய அளவில் 65 வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிய அளவில் 817 முகாம்கள் உள்பட 882 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த முகாம்களில் இதுவரைக்கும் 15 ஆயிரத்து 691 நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. 99 ஆயிரத்து 989 பேர் பல்வேறு வேலைவாய்ப்புகளை பெற்றிருக்கிறார்கள். 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை வேலை பெற்றுள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் உண்டு. இதுவும் ஒரு திராவிட மாடல்.

தொடக்கம்

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு என்பது முடிவல்ல, தொடக்கம். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதை இலக்காக வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்களை தகுதி, திறமை, அறிவு, ஆற்றல் படைத்தவர்களாக ஆக்குவதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம். வேலை இல்லை என்ற நிலையும் இருக்கக்கூடாது, வேலைக்கு திறமையான இளைஞர்கள் இல்லை என்ற நிலையும் இருக்கக்கூடாது, வேலையிழப்பும் இருக்கக்கூடாது என்று நான் உத்தரவிட்டிருக்கிறேன்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பணி நியமனம்

இந்த முகாமில் 389 தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் 21 ஆயிரத்து 623 பேரில் 26 மாற்றுத்திறனாளிகள் உள்பட 2 ஆயிரத்து 742 பேர் பணி நியமனம் பெற்றனர். மேலும் இந்த முகாமில் முதற்கட்ட நேர்முக தேர்வில் 2 ஆயிரத்து 477 பேர் தேர்ச்சி பெற்று, இரண்டாம் கட்ட நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 726 ஆகும்.


Next Story