சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை..!!
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மீண்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன்படி எழும்பூர், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை ஈ.சி.ஆர் மற்றும் திருப்போரூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஒரிய இடங்களிலும் இடி மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.