ஜே.என்.யூ பல்கலைக்கழகம் ஜனநாயகத்துடன் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
ஜே.என்.யூ பல்கலைக்கழகம் அனைவருக்குமான இடமாக ஜனநாயகத்துடன் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
ஜே.என்.யூ பல்கலைக்கழகம் அனைவருக்குமான இடமாக ஜனநாயகத்துடன் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஏ.பி.வி.பி அமைப்பினர் கொலைவெறித் தாக்குதலில் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர் நாசர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை பெரியார் படம் உள்ளிட்டு சேதமாக்கப் பட்டுள்ளது.
காயமடைந்த மாணவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறிய பிறகும் கூட மீண்டும் தாக்க முயன்றுள்ளார்கள் ஏ.பி.வி.பி அமைப்பினர். பல்கலை கழகத்திற்குள் படிப்பதற்கும், பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் நடக்கவும் விவாதிக்கவும் உரிமை உள்ளது. ஆனால் ஏ.பி.வி.பி அதனை முடக்க முயல்கிறது.
பல்கலை கழக நிர்வாகம் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நிர்வாகத்தை நடத்துவதே ஏ.பி.வி.பி பரிவாரம்தானா? என்ற கேள்விதான் எழுகிறது. இதற்கு முன்பும் கூட ஏ.பி.வி.பி அமைப்பினர், வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து மாணவர் தலைவர்கள் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இப்போது அந்த வன்முறையை தமிழ்நாட்டு மாணவரை நோக்கி நடத்தியுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜே.என்.யூ பல்கலைக்கழகம் அனைவருக்குமான இடமாக ஜனநாயகத்துடன் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும்" என்று கூறியுள்ளார்.