ஏரியில் மூழ்கி வியாபாரி பலி
சென்னை பெருங்குடியில் ஏரியில் மூழ்கி வியாபாரி பலியானார்.
சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுகுட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கம் (வயது 34). இவர், அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். பள்ளி விடுமுறைக்காக இவரது வீட்டுக்கு வந்திருந்த உறவினரின் குழந்தைகளை குளிப்பதற்காக அருகில் உள்ள கல்லுக்குட்டை ஏரிக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்துச்சென்றார். ஏரியில் குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கிய உறவினர் குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்த தங்கம், ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சேற்றில் சிக்கிய அவர் நீரில் மூழ்கி பலியானார். துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினருடன் இணைந்து தங்கத்தின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் இருள் சூழ்ந்து விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
நேற்று காலை தங்கம் உடல் ஏரியில் மிதந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.