நாட்டின் பிரச்சினைகளை தீர்க்காமல், அலட்சியமாக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி - திருச்சி சிவா எம்.பி. கண்டனம்


நாட்டின் பிரச்சினைகளை தீர்க்காமல், அலட்சியமாக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி - திருச்சி சிவா எம்.பி. கண்டனம்
x

இந்தியா கூட்டணி பெயரை கேட்டாலே பாஜக அரசுக்கு கோபம் வருகிறது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார்.

சென்னை,

சென்னை அறிவாலயத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. பல குற்றங்களுக்கு தண்டனைகள் குறைப்பு, 42 சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது பாஜக அரசு. எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அரசாக மட்டுமே பாஜக செயல்பட்டு வருகிறது.

மணிப்பூர் கலவரத்தில் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காமல் பொறுப்பற்ற முறையில் பிரதமர் மோடி செயல்படுகிறார். நாட்டின் பிரச்னைகளை தீர்க்காமல், அலட்சியமாக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி.

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மக்களவையில் 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார். மணிப்பூர் விவகாரம் பற்றி, பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை. பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டது பற்றி அவர் உரிய விளக்கமளிக்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்றுவந்தால் பிரச்னை முடிந்துவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. இந்தியா கூட்டணி பெயரை கேட்டாலே பாஜக அரசுக்கு கோபம் வருகிறது.

நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல; மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்பதற்காகவே குரல் எழுப்பினோம். மக்களவை, மாநிலங்களவைகளில் ஒரு சட்டம் ஒரே நாளில் நிறைவேறிய வரலாறு கிடையாது; ஆனால், எந்த விவாதமும் நடத்தாமல் இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

மாநில கட்சியான திமுக மீது நாடாளுமன்றத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் விமர்சனம் வைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அச்சம் இங்குதான் உள்ளது. தமிழ்நாட்டில் அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியாது என்பதை கடந்த காலத்தில் நிரூபித்துள்ளோம், வரும் தேர்தலிலும் நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story