திருச்சி ஐ.டி. ஊழியரிடம் பெண் போல பேசி ரூ.3 லட்சம் பறிப்பு; சென்னை வாலிபருக்கு வலைவீச்சு


திருச்சி ஐ.டி. ஊழியரிடம் பெண் போல பேசி ரூ.3 லட்சம் பறிப்பு; சென்னை வாலிபருக்கு வலைவீச்சு
x

திருச்சி ஐ.டி. ஊழியரிடம் பெண் போல பேசி ரூ.3 லட்சம் பறித்த சென்னை வாலிபரை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.

திருச்சி:

திருச்சி தாத்தையங்கார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவநீதபாபு (வயது 30). இவர் திருச்சியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தன்னுடைய செல்போனில் டேட்டிங் வெப்சைட் என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இந்த செயலி மூலம் ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சில நாட்கள் கழித்து நவநீத பாபு அவர் பேசிய பெண்ணிடமிருந்து ஒரு ஆண் குரலில் இருந்து மிரட்டல் ஆடியோ வந்துள்ளது. அதில் நவநீதபாபுவிடம் பெண் போல பேசிய ஆண் ஒருவர் நவநீதபாபு பேசிய ஆடியோ, அவர் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தையும் ஆதாரமாக எடுத்து வைத்துக்கொண்டு நவநீத பாபுவிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

மேலும் பணம் தர மறுத்தால் உங்கள் மனைவி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நவநீதபாபு அந்த மர்ம நபர் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பி உள்ளார். தற்போது வரை ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் வரை அனுப்பி உள்ளார்.

தொடர்ந்து அந்த மர்ம நபர் நவநீத பாபுவிடம் பணத்தை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான நவநீத பாபு, திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த மர்ம நபர் சென்னையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரை பிடிக்க போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.


Related Tags :
Next Story