இருக்கை விவகாரம்: சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை கண்டித்து சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவின் பேரில் அவை காவலர்கள் மூலம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில், எங்களுடைய நியாயமான கோரிக்கையை சபாநாயகர் அப்பாவுவிடம் முன்வைத்துள்ளோம். சட்டப்பேரவையில் எந்த உறுப்பினரை எந்த இருக்கையில் அமரவைக்க வேண்டும் என முடிவு செய்வது சபாநாயகரின் தனிப்பட்ட அதிகாரம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, பல முறை பேரவை தலைவரிடம் கடிதம் அளித்தும், அதற்கு தீர்வு காணப்படவில்லை. நீதிமன்ற தீர்ப்பின் நகலை வழங்கியும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்; 3 உறுப்பினர்கள் நீக்கம் செல்லும் என நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது; 3 எம்.எல்.ஏ.க்களையும் கட்சி சாராதவர்கள் என அறிவிக்க வேண்டும்.
காலம்காலமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு அருகேதான் துணைத்தலைவர் அமர வைக்கப்படுவார்; மரபுப்படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமிக்கப்படவில்லை. சபாநாயகர் தனது மரபை மீறி செயல்படுகிறார்; புனிதமான இருக்கையில் உள்ள சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட்டு எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்கு அமைச்சர்கள் பதில் தரும் முன்பே சபாநாயகர் பேசிவிடுகிறார். விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமே திமுகவிற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.