பள்ளி மேற்கூரை மீது மரம் விழுந்ததில் மாணவிகள் காயம்


பள்ளி மேற்கூரை மீது மரம் விழுந்ததில் மாணவிகள் காயம்
x

திருவள்ளூர் அடுத்த சிறுவனூர் கண்டிகை கிராமத்தில் உள்ள பள்ளியின் மேற்கூரை மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவிகள் காயம் அடைந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த சிறுவனூர் கண்டிகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 22 மாணவர்கள், 13 மாணவிகள் என மொத்தம் 35 பேர் படித்து வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் உள்ள ஓடு போட்ட கட்டிடம் சத்துணவு சமைக்கும் இடமாக செயல்பட்டு வருகிறது. அதை மாணவ-மாணவிகள் உணவு சாப்பிடுவதற்காக பயன்படுத்தி வந்தனர். நேற்று மதியம் 1 மணி அளவில் மாணவ-மாணவிகள் ஓடு போட்ட அந்த பழைய கட்டிடத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

மரம் முறிந்து விழுந்தது

அப்போது சாலையோரம் இருந்த பழமையான அரச மரத்தில் இருந்து பெரிய கிளை திடீரென முறிந்து மாணவர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த ஓட்டு கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் மேற்கூரையில் இருந்த ஓடுகள் சரிந்து மாணவ- மாணவிகள் மீது விழுந்தது.

இதில் இதில் சந்தனா (7), தன்சிகா (7), ஹேமா ஸ்ரீ (6), நிஷா (7) ஆகிய 4 மாணவிகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் சில மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மாணவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த சத்துணவு பணியாளர் சுகுணா (வயது 48) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story