நியூட்ரினோ திட்டத்தில் தமிழ்நாடு அரசு 'அந்தர்பல்டி' - சுப்ரீம் கோர்ட் போட்ட முக்கிய உத்தரவு


நியூட்ரினோ திட்டத்தில் தமிழ்நாடு அரசு அந்தர்பல்டி - சுப்ரீம் கோர்ட் போட்ட முக்கிய உத்தரவு
x

நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி, 'இந்த திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு தொடக்கத்தில் இருந்தது. ஆனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு 'அந்தர்பல்டி' அடித்தது' என வாதிட்டார்.

அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி, 'நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு கொண்டுள்ளது. ஏனெனில் சுற்றுச்சூழல் அனுமதி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட வேண்டும். முதலில் அந்தப்பகுதியில் கட்டிடம் கட்டுவதாக சொல்லப்பட்டது. 2017-ம் ஆண்டே திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு எடுத்து விட்டது' என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, ' இரு பக்க எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தது.


Next Story