காதலியை தன்னிடம் இருந்து பிரித்ததால் ரெயில்முன் பாய்ந்து தமிழக வாலிபர் தற்கொலை


காதலியை தன்னிடம் இருந்து பிரித்ததால் ரெயில்முன் பாய்ந்து தமிழக வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:47 PM GMT)

காதலியை தன்னிடம் இருந்து பிரித்து அழைத்து சென்றதால், தமிழக வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

காதலியை தன்னிடம் இருந்து பிரித்து அழைத்து சென்றதால், தமிழக வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

காதல்

தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 23). இவர் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் காதலித்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர். அவர்களது காதலுக்கு, மணிகண்டன் வீட்டார் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், இளம்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்கொலை

இதற்கிடையே அவர்கள் ஒரே வீட்டில் வசிப்பது குறித்து அறிந்த இளம்பெண் வீட்டினர், மகளை சந்திக்க வந்தனர். பின்னர் அவர்கள் காதல் ஜோடியை தாக்கி, மகளை தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தனது சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் தனது தாய் மற்றும் குடும்பத்தினரிடம் இதுகுறித்து மணிகண்டன் கூறி கதறி அழுதார்.

இந்த நிலையில் அவர் தனது வீட்டு அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தனது தாய் மற்றும் காதலிக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அப்போது தன்னை மன்னித்து விடுமாறு தனது தாயிடம் கூறி இருக்கிறார்.

போலீசில் காதலி புகார்

மேலும் இளம்பெண், மணிகண்டனுக்கு ஒரு பூனைக்குட்டியை பரிசளித்தார். அந்த பூனைக்குட்டியை அவர் தனது 'காதல்' சின்னமாக கருதி நன்றாக வளர்த்து வந்தார். அந்த பூனையை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு தனது காதலியிடமும், தாயிடமும் கூறி இருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வழக்கை பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசுக்கு அவர்கள் மாற்றினர். காதல் ஜோடி தாக்கப்பட்ட இடம் எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால் அந்த வழக்கு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ் நிலையத்திற்கு இளம்பெண் வந்தார். அவர் தனது காதலன் சாவுக்கு, தனது குடும்பத்தினர் தான் காரணம் என்றும், தன்னுடைய தாய் இறந்த பிறகு பாட்டியுடன் வசித்து வந்ததாகவும், கல்லூரியில் படிக்கும் சமயத்தில் மணிகண்டனை காதலித்து வந்ததாகவும் கூறி இருந்தார். மேற்கண்ட தகவல்களை பெற்று கொண்ட போலீசார் இளம்பெண்ணின் உறவினர்கள் தீக்ஷித், ஹேமந்த், ரவி ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story