வேலைக்கு சேர்ந்த 2 வாரத்திலேயே கடையில் கைவரிசை.. போலீசில் சிக்கிய வடமாநில வாலிபர்கள்


வேலைக்கு சேர்ந்த 2 வாரத்திலேயே கடையில் கைவரிசை..  போலீசில் சிக்கிய வடமாநில வாலிபர்கள்
x
தினத்தந்தி 2 Aug 2022 2:46 AM GMT (Updated: 2 Aug 2022 2:49 AM GMT)

சவுகார்பேட்டையில் வேலைக்கு சேர்ந்த 2 வாரத்திலேயே பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடித்து சென்ற கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை சவுகார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவை சேர்ந்தவர் ஜெலாம்சிங் (வயது 42). இவர் பூக்கடை கிருஷ்ண ஐயர் தெருவில் பிளாஸ்டிக் மொத்த விற்பனை மற்றும் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவரது கடையில் 2 வாரத்திற்கு முன்பு வேலை கேட்டு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போலாராம் என்பவரின் மகன் ராஜாராம் (23) என்பவர் வேலை கேட்டு வந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜெலாம் சிங் அவரை வேலைக்கு சேர்த்துக் கொண்டு அவர் வீட்டில் ஒருவர் போல் நம்பிக்கையாக கடையின் கல்லா சாவி மற்றும் கடையின் சாவியை நம்பிக்கையாக கொடுத்து உள்ளார்.

இங்கே தங்கி இருந்த ராஜாராம் நேற்று முன்தினம் இரவு தனது சகோதரரான பிரகாராம் (32) என்பவரை வரவழைத்து கடையில் இருந்த 7 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம், 19 வெள்ளி காயின், வெள்ளி விநாயகர் சிலை, சில்வர் மெட்டல் லாக் -2, இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை கடையிலிருந்து கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார்.

அப்போது பூக்கடை ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் சென்ட்ரல் ரயில் நிலையம் அடுத்த வால் டக்ஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த இருவரையும் பிடித்து விசாரித்துள்ளார். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது கட்டு கட்டாக பணம் இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ரோந்து பணி போலீசார் உடனே இவர்களை பூக்கடை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தியதில் இவர்கள் ஜெலாம் சிங் கடையில் வேலை செய்வதும் வந்ததும் அதே கடையில் பணம் வெள்ளி பொருட்கள் திருடிக் கொண்டு தப்பிச் செல்வது விசாரணையில் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து பணம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்து இவர்கள் மீது பூக்கடை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பூக்கடை பகுதியில் அதிகாலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story