கொடைக்கானல் புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கொடைக்கானல் புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 April 2024 9:46 AM IST (Updated: 29 April 2024 11:24 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெப்பத்தால் 22 மாவட்டங்களில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டத்தை நடத்தி அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், ஓய்வுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் இன்று கொடைக்கானல் புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் வீட்டில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் சென்றார். பின்னர், அங்கிருந்து விமானத்தில் மதுரை செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் கொடைக்கானல் செல்கிறார். மதியம் 1 மணியளவில் கொடைக்கானல் பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 4ம் தேதிவரை கொடைக்கானலில் தங்குகிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி கொடைக்கானல் பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முதல்-அமைச்சர் வருகையையொட்டி கொடைக்கானலில் 4ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது


Next Story