பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
தி.மு.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க சின்னத்தை முடக்க சிலர் சதி செய்தனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருச்சி,
திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி காலம் தான் தமிழகத்தில் பொற்காலம். எங்களது ஆட்சியை பற்றி முதல் அமைச்சர் ஸ்டாலின் இருண்ட காலம் என்று சொல்கிறார். யார் ஆட்சியை பற்றி குறை சொல்கிறீர்கள்?.. தி.மு.க.வின் இந்த 3 ஆண்டு கால ஆட்சி தான் இருண்ட காலம்.
14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. மக்களுக்கு என்ன செய்தது. 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி கடன் தான் வாங்கியுள்ளீர்கள். மக்களுக்கு என்ன செய்தீர்கள்?. மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக காங்கிரஸ், பா.ஜ.க. என மாறி மாறி ஆதரவு கொடுத்தது திமுக தான்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியம் இல்லை, மக்கள் முக்கியம் என்பதால் பாஜக கூட்டணியில் இருந்து விலகினோம்.
தமிழகத்தில் செல்வாக்கை இழந்த ஸ்டாலின், இந்தியா கூட்டணி என்று சொல்லி தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்தியா கூட்டணி பெயரளவுக்கு தான் உள்ளது. பிரதமர் வேட்பாளரே யார் என்று சொல்லவில்லை. திமுகவுடன் சேர்ந்து அ.தி.மு.க சின்னத்தை முடக்க சிலர் சதி செய்தனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை" இவ்வாறு அவர் பேசினார்.