தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் விரைவில் இறுதி முடிவு; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி நம்பிக்கை
‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இழுபறி
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 40 தொகுதிகள் கேட்டு வரும் நிலையில் 22 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தி.மு.க. திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீட்டை முடிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி இருந்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு சுமுகமாக முடிந்து வரும் நிலையில் காங்கிரஸ் உடனான தொகுதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டு வருவது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
2 கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியினரை தி.மு.க. பேச்சுவார்த்தைக்கு அழைக்காதது நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்து கேட்ட மேலிட பொறுப்பாளர்இந்தநிலையில் தான் தொகுதி எண்ணிக்கையில் சுமுக உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் தி.மு.க.வுடனான கூட்டணியை தொடர்வதா? அல்லது வேறு முடிவு எடுப்பதா? என்பது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் நேற்று முன்தினம் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களை தனித்தனியாக அழைத்து கருத்து கேட்டார்.
அப்போது, தி.மு.க. கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதியை கேட்டு பெற வேண்டும் என்பதே பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாக இருந்துள்ளது.
அவசர செயற்குழுஇந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. மேலிட பொறுப்பாளர்கள் வீரப்பமொய்லி, தினேஷ்குண்டுராவ், பள்ளம் ராஜு, நிதின்ராவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாநில பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. ஒதுக்குவதாக கூறும் தொகுதி எண்ணிக்கை குறித்தும், குறைவான எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில் தி.மு.க.வுடனான கூட்டணியில் தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
விரைவில் இறுதி முடிவுகூட்ட முடிவில் வீரப்பமொய்லி நிருபர்களிடம் கூறும்போது, ‘தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் கேட்கும் தொகுதி எண்ணிக்கைக்கும், தி.மு.க. தருவதாக கூறும் தொகுதி எண்ணிக்கைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
பகல் 11.50 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது.
திடீர் மறியல்காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பெண்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று மகளிர் காங்கிரசைச் சேர்ந்த சிலர் சத்தியமூர்த்தி பவன் முன்பு அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்கு பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
காங்கிரஸ் சார்பில் கடந்த 25-ந்தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு அளிக்க நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர். தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளதாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்றும், நாளையும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடக்கிறது.
பிரியங்காகாந்தி போட்டியிட விருப்ப மனு
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவன் வந்தார். பின்னர் அவர், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு அளித்தார்.இந்த தொகுதியில் போட்டியிட தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், அந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்த மறைந்த வசந்தகுமாரின் மகனும் ஆன விஜய்வசந்த் மற்றும் விஜயதரணி எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.