பாகிஸ்தான்: 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதகுருவுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

பாகிஸ்தானில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதகுருவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் டோபா டெக் சிங் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை குரி அடிஃயுர் ரஹ்மான் என்ற இஸ்லாமிய மதகுரு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்தார். 12 வயது சிறுமி மதப்பள்ளியில் பாடம் கற்பதற்காக சென்ற போது அங்கு இருந்த மதகுரு ரஹ்மான் தனது உதவியாளர் பில்கியுஷ் பிபி உதவியுடன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்ட அந்த சிறுமியை ரஹ்மான் பாலைவனப்பகுதியில் விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
பாலைவனப்பகுதியில் சிறுமி அழுதுகொண்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி தான் மதகுரு ரஹ்மானால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு ரஹ்மான் மற்றும் அவருக்கு இந்த குற்றம் செய்ய உதவி செய்த பில்கியுஷ் பிபி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதனை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மதகுரு ரஹ்மான் மற்றும் அவருக்கு உதவிய பில்கியுஷ் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதில், 12 வயது சிறுமியை மதகுரு ரஹ்மான் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.
இதனை தொடர்ந்து 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு குரி அடிஃயுர் ரஹ்மானுக்கு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், பாகிஸ்தான் ரூபாயில் 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது.
அதேபோல், சிறுமியை மதகுரு பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய பில்கியுஷ் பிபி-க்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story