தும்பிக்கை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட யானை : உலகை உலுக்கும் புகைப்படம் வைரலாகிறது


தும்பிக்கை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட யானை :  உலகை உலுக்கும் புகைப்படம் வைரலாகிறது
x
தினத்தந்தி 22 July 2019 11:45 PM GMT (Updated: 22 July 2019 7:39 PM GMT)

தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவை சேர்ந்த புகைப்பட கலைஞரான ஜஸ்டின் சுல்லிவான் (வயது 28) ஆவணப்படம் ஒன்றை எடுப்பதற்காக அங்கு வனப்பகுதிக்கு சென்றார்.

கபோரோன், 

கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானத்தை வனத்துக்கு மேலே பறக்கவிட்டு அவர் படம் பிடித்தார். அப்போது படம் பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

யானை ஒன்று முகம் சிதைக்கப்பட்டு தும்பிக்கை தனியாக வெட்டி வீசப்பட்ட நிலையில் இறந்துகிடந்த புகைப்படம் தான் அது.

பார்ப்பவர்களின் நெஞ்சை நொறுக்கும், அந்த புகைப்படத்துக்கு ‘டிஸ்கனெக்சன்’ என பெயரிட்டு ஜஸ்டின் சுல்லிவான் பத்திரிகையில் வெளியிட்டார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படம் சர்வதேச பத்திரிகை புகைப்பட போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளது.

இதுகுறித்து ஜஸ்டின் சுல்லிவான் கூறுகையில், “இந்த புகைப்படத்துக்கு ‘டிஸ்கனெக்சன்’ என பெயரிட்டுள்ளேன். தரையில் நின்று கொண்டு பார்த்தால் இதன் வீரியம் புரியாது. மேலே இருந்து பார்த்தால் தான் புகைப்படத்தின் வலி புரியும். ‘டிஸ்கனெக்சன்’ என்பது யானைக்கும், துண்டித்து கிடக்கும் தும்பிக்கைக்கும் இடையேயானது மட்டும் அல்ல. விலங்குகள் கொலைக்கும், அதை கண்டுகொள்ளாத நமக்கும் இடையேயானது” என கூறினார்.

போட்ஸ்வானாவில் 5 ஆண்டுகளாக அமலில் இருந்த யானைகள் வேட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த மே மாதம் நீக்கப்பட்டது. இதனால் யானைகளை கொல்வது அங்கு குற்றமாகாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story