காஷ்மீர் விவகாரம்: “பதற்றத்தை தணிக்க வேண்டும்” - இம்ரான் கானுக்கு டிரம்ப் கண்டிப்பு


காஷ்மீர் விவகாரம்: “பதற்றத்தை தணிக்க வேண்டும்” - இம்ரான் கானுக்கு டிரம்ப் கண்டிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 3:28 AM GMT (Updated: 20 Aug 2019 9:26 PM GMT)

காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று இம்ரான் கானுக்கு டொனால்டு டிரம்ப் அறிவுரை கூறினார்.

வாஷிங்டன்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய அரசை வரம்புமீறி பேசி வருகிறார். ‘பாசிஸ்ட்’ என்றும், ‘மேலாதிக்க அரசு’ என்றும் அவர் சமீபத்தில் கூறினார்.

பாகிஸ்தானுக்கும், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கும் இந்திய அரசு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவரது பேச்சுகளால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்கும் விதமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், நேற்று முன்தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் தொலைபேசியில் பேசினார்.

முதலில், மோடியுடன் பேசியபோது, இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம், வன்முறை இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மோடி வலியுறுத்தினார். சில தலைவர்கள் (இம்ரான் கான்) இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் வரம்புமீறி பேசி வருவது அமைதிக்கு உகந்தது அல்ல என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, இம்ரான் கானுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது, பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன், காஷ்மீர் நிலவரம் பற்றி பேசும்போது, பேச்சில் மென்மையை கடைப்பிடியுங்கள் என்று டிரம்ப் அறிவுறுத்தினார்.

இந்த தொலைபேசி பேச்சு குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி கூறியதாவது:-

காஷ்மீர் நிலவரத்துக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்காற்றுமாறு டிரம்பை இம்ரான் கான் கேட்டுக்கொண்டார். காஷ்மீரில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு, மக்கள் நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காஷ்மீர் நிலவரத்தை நேரில் காண மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளை காஷ்மீருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.

மோடி, இம்ரான் கானுடனான தொலைபேசி பேச்சு குறித்து டிரம்ப் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னுடைய இரண்டு நல்ல நண்பர்களுடன் வர்த்தகம், ராணுவ உறவு, முக்கியமாக காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதாக அவர் கூறியுள்ளார்.

பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும், இருதரப்பும் பொறுமையாக செயல்பட வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.


Next Story